அரசாங்கம் பாரியளவில் மக்கள் பணத்தை வீண் விரயம் செய்வதாக முறைப்பாடு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பாரிய அளவிலான மோசடி தொடர்பில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் இந்த முறைப்பாட்டை தாம் செய்ததாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அரசாங்க அமைச்சர்களின் சம்பளங்கள் கட்சி நிதியத்திற்காக பைப்பிலிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பணம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் செலவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆளும் தேசிய மக்கள் சக்தியில் சுமார் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளின் மொத்தத் தொகை 30 மில்லியன் ரூபாவிற்கு அதிகம் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இவ்வாறு கிடைக்க பெறும் மொத்த பணம் அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் விடுதலை முன்னணியின் கட்சியின் கணக்கில் வைப்பிலிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கட்சி கணக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களது கொடுப்பனவுகள் வைப்பிலிடப்படுவதானது பொதுமக்களின் பணத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கொடுப்பனவு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை கொடுப்பனவு, உறுப்பினர் வருகை கொடுப்பனவு, தெரிவுக்குழு அமர்வுகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு போன்றன மட்டுமே தாங்கள் விரும்பியவாறு செலவிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மொத்தத் தொகை சுமார் 71000 ரூபாவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் காரியாலய கொடுப்பனவான ஒரு லட்சம் ரூபாய், விருந்தினர்களுக்கு செலவிடுவதற்காக ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு, தொலைபேசி கட்டணமாக 50 ஆயிரம் ரூபாய், போக்குவரத்து கொடுப்பனவு மற்றும் எரிபொருள் கொடுப்பனவு என்பனவும் வழங்கப்படுகின்றன.
இவ்வாறான செலவுகளை கட்சி நிதியில் வைப்பிலிட முடியாது இவை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வழங்கப்படும் தொகைகள் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புகளைப் பேணவும், உலக விடயங்களை அறிந்து கொள்ளவும் தொலைபேசி கட்டணங்கள் வழங்கப்படுவதகாவும், காரியாலயக் கொடுப்பனவு நாடாளுமன்ற உறுப்பினர் காரியாலயத்தை பயன்படுத்தி மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கில் வழங்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பணத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியே தான் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.



