ஆளும் கட்சி 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட மையத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
லஞ்சம் ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு அளிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 42 மற்றும் 43 ஆம் பிரிவுகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, அமைப்பின் சார்பில் தரிஷன தம்திரிகே இம்முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
எரிபொருள் கொடுப்பனவு
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அலுவலக பராமரிப்புக்காக ரூ. 100,000, தொலைபேசி பயன்பாட்டிற்கு ரூ. 50,000, சாரதி சம்பளம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் அமர்வு ஒன்றுக்கு ரூ. 2,500 வருகைக் கொடுப்பனவாகவும் வழங்கப்படுகிறது.

திரட்டப்பட்ட நிதியத்திலிருந்து வழங்கப்படும் இப் பணம், தொகுதிகளில் அலுவலகங்களை அமைத்து மக்களுக்குச் சேவையாற்றவும், தொகுதி மக்களுடன் தொடர்பைப்பேணவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அனைத்துக் கொடுப்பனவுகளும் கட்சியின் கணக்கில் வைப்பிலிடப்படுவதாக தேசிய மக்கள் சக்தி பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.
பொதுப் பணத்தை இவ்வாறான வெளிக்கடந்த கணக்குகளுக்கு மாற்றுவதற்கு சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை.
விசாரணை
இதன் மூலம் தேசிய மக்கள் சக்தியும், ஜே.வி.பியும் முறையற்ற நிதி நன்மையைப் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஆணைக்குழுவுக்கு அழைத்துக் விசாரணை நடத்துமாறும், சட்ட மீறல்கள் குறித்து தீர்மானிக்குமாறும் முறைப்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த நிதிப் பதிவுகளின் பிரதிகளும் சான்றாக கையளிக்கப்பட்டன.
அந்த அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வாயிலாக மொத்தம் 21,53,16,076.78 ரூபா தொகையைக் கட்சி பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18