நானுஓயாவில் 13 வயது மாணவியை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் மீது முறைப்பாடு
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி நேற்று(05.02.2026) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கியதில் மாணவிக்கு அடிகாயங்கள் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டு தானாகவே சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 08ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு ஆசிரியரால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலம்
இந்நிலையில், இன்று(06.02.2026) குறித்த மாணவி பாடசாலைக்கு செல்ல வில்லை எனவும் தொடர்ந்து தலைவலி, தலைச்சுற்று, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்ட வேளையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த ஆசிரியர் வழக்கமாக பாடசாலை மாணவிகளுக்கு தொல்லை கொடுப்பதாகவும், மாணவ, மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் வந்துள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான மாணவி தெரிவித்துள்ளார்.
அதே போன்று நேற்று(05) என்னிடம் பெற்றோரை கூறி, தகாத வார்த்தைகளால் திட்டியும் கடுமையாக கன்னம் மற்றும் செவி பகுதிகளில் தாக்கி இறுதியில் தலையை பிடித்து மேசையில் வைத்து முதுகு பகுதியிலும் ஆசிரியரின் முழங்கையால் தாக்கினார் இதனால் வலி தாங்க முடியாமல் எனக்கு சிறுநீர் கசிவும் ஏற்பட்டது.
பாடசாலை முடியும் வரை அதே சீருடை மற்றும் பாதனி உடன் வீடு திரும்பினேன் என மாணவி தெரிவித்துள்ளார். பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது, நடந்தவற்றை கூறி தனது அடிகாயங்களையும் உட்காயங்களையும் காட்டியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனைத் தொடர்ந்து மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும் பொலிஸ் நிலையத்தில் மாணவி மூலம் முறைப்பாட்டை பதிவு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய ஆசிரியர் நானுஓயா பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்த உள்ளார்.

குறித்த மாணவியை தாக்கிய ஆசிரியர் இவ்வாறு பல மாணவர்களை பாடசாலையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது வழமை என்றும் குறித்த ஆசிரியரால் ஏற்கனவே ஒரு மாணவன் மீது தும்புத்தடி கொண்டு தாக்கிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக பாடசாலை பெற்றோர் வட்டாரங்கள் மற்றும் பொலிஸாரின் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .