வரலாற்றில் முதல் தடவையாக நிகழ்ந்த விடயம்! ஜனாதிபதியை பாராட்டிய அமைச்சர்
வரலாற்றில் முதல் தடவையாக பயிர் சேதத்தின் பின்னர் இரண்டு மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கியமைக்காக ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சுக்கும் பாராட்டுகளை தெரிவிக்கின்றேன் என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “அண்மையில் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.
ஏனைய அமைச்சுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த குற்றச்சாட்டுகளுடன் நிறைவேற்றப்பட்டது. அவை அனைத்தும் கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பானவையே ஆகும்.
தற்போது அனைத்து துறைகளினதும் ஒத்துழைப்புடன் எமது அமைச்சு முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை கண்டுள்ளது.
தற்போது விளைச்சல் சேதங்களுக்கு நட்ட ஈடு வழங்கி வருகின்றோம். அதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்து அந்த வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தி வருகின்றோம்.
வரலாற்றில் முதல் முறையாகவே இவ்வாறு விளைச்சல் சேதங்கள் ஏற்பட்டு ஓரிரண்டு மாதங்களில் நட்ட ஈடு வழங்கப்படுகின்றது. இதற்காக ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சுக்கும் பாராட்டுகளை தெரிவிக்கின்றேன்.
அதிக விளைச்சல்
மிகவும் சவால்மிக்க சந்தர்ப்பத்திலேயே நான் இந்த அமைச்சை ஏற்றுக்கொண்டேன். வயல்களுக்கு சென்று பயிரிடுமாறு நான் முதல் முதலாக விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினேன்.
அன்று 212,000 ஹெக்டெயார்கள் நெல் பயிரிடப்பட்டது. உரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயிரிடுமாறு நான் கூறினேன். அதன் பிறகு 512,000 ஹெக்டெயார்கள் நெல் பயிரிடப்பட்டது. இதுவே அண்மைக்காலத்தில் கிடைத்த அதிக விளைச்சலாகும்.
அதன் பின்னர் நாம் படிப்படியாக இரு போகங்களிலும் அதிக விளைச்சலைப் பெற்றுக்கொண்டோம்.
நாம் அனைத்து வகை உரங்களையும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுத்தோம். நிதி உதவிகளையும் வழங்கினோம். எரிபொருள் மாணியங்களையும் வழங்கினோம்.
இதன் மூலம் வெற்றிகரமான நெல் விளைச்சல் கிடைத்தது. எமக்கு வருடாந்தம் 25,40,000 மெட்ரிக் தொன் அரிசி அவசியமாகும். இம்முறை 27,50,000 மெட்ரிக் தொன் விளைச்சல் கிடைத்தது.
இதன் ஊடாக இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கு மேல் மேலதிக விளைச்சல் இம்முறை கிடைத்துள்ளது. ஆனாலும் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.
காரணம், அதிக நெல் விளைச்சல் கிடைத்தாலும் நெல் ஆலையாளர்கள் அவற்றை முழுமையாக சந்தைக்கு விநியோகிக்காத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
இதேவேளை இளைஞர்கள் விவசாயத்தை விட்டுத் தூரமாகியுள்ளமை எமக்குள்ள பாரிய பிரச்சினையாகும். பெரும்பாலும் வயதானவர்களே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
வருமானம் போதாமை உட்பட இன்னும் பல்வேறு காரணங்களினால் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை. எனவே அவர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க அவசியமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
இதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் பணிகளை மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்"என கூறியுள்ளார்.