கைதிகளின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலவரத்தின் போது உயிரிழந்த 21 கைதிகளின் குடும்பங்களுக்கும் உடனடியாக நியாயமான இழப்பீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீதி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த ஜூலை 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்களிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளதாக அக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இக்கைதிகளின் உயிர்களுக்கு அரசாங்கமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைக்குள் நிகழும் மரணங்களுக்கு அரசாங்கம் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என தற்போதைய ஜனாதிபதியும் முன்னர் தெரிவித்திருந்ததாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களின் நலனுக்காக இழப்பீடு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அக்குழு, இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகளும், 2020 ஆம் ஆண்டு மஹர சிறைச்சாலையில் 11 கைதிகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களையும் நினைவூட்டியுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கைகளின் பரிந்துரைகள் சரிவர நடைமுறைப்படுத்தப்படாததன் காரணமாகவே இவ்வாறான துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வதாக அக்கடிதத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கமும் கையொப்பமிட்டுள்ள கைதிகளை நடத்துவது தொடர்பான குறைந்தபட்ச சாசனமான 'நெல்சன் மண்டேலா' சர்வதேச விதிகளின் படியும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளதாக அக்குழு வலியுறுத்தியுள்ளது.
"கைதிகளும் மனிதர்களே" என்ற அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில், உயிரிழந்த கைதிகளுக்கு நீதியை நிலைநாட்ட உடனடியாக தலையிடுமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு நீதி அமைச்சரிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam