நாட்டை புரட்டி போட்ட டிட்வா புயல்: ஈடுச் செய்ய முடியாத இழப்பிற்கு குவியும் நிதி உதவி
அண்மையில் நாட்டில் பெருமளவான சேதங்களை ஏற்படுத்தி நாட்டின் தலைவிதியை மாற்றியமைத்த டிட்வா புயல் பாதிப்புக்களில் இருந்து மக்கள் இன்னும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
நாட்டின் மலையகப் பகுதி உட்பட கிழக்கு மாகாணத்தையும் இது பாதித்துள்ளது.
நாட்டை புரட்டி போட்ட டிட்வா புயல்
நாட்டில் ஏற்பட்ட கனமழை காரணமாக வெள்ளம், மண்சரிவு, குளங்களின் வான் கதவுகள் உடைப்பு என பல பேரிடர் மூலம் பல உயிர் சேதங்களும், சொத்துக்கள் இழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில், முக்கிய தொழில்களாக காணப்படுகின்ற விவசாய, கடற்றொழில், கால் நடை வளர்ப்பு போன்றன பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, பாடசாலைகளும் பாதிக்கப்பட்டு, பாடசாலை செல்லும் மாணவர்களின் மனநிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலையும் காணப்படுகிறது. உளவளத்துணை மூலமாக அவர்களது உள்ளத்தை வளப்படுத்தி மீண்டும் பாடசாலைக் கல்வியை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிப்பு செய்ய வேண்டும்.
லட்சக்கணக்கில் நிதி உதவி
இவ்வாறான நிலையில், கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் கிழக்கு மாகாண பாதிப்பு தொடர்பில் மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர பாடசாலை அபிவிருத்தி மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவி வழங்கியமை தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 142,793 நபர்களை சேர்ந்த 46,250 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன், முழுமையாக 132 வீடுகளும் பகுதியளவில் 2182 வீடுகளும் சேதமடைந்துள்ளன. இவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவாக ரூபா 25,000.00 உம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.
மொத்தமாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 23,889 குடும்பங்களுக்கு தலா ரூபா 25,000.00 வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

92.04 வீதமாக காணப்படுகின்ற மொத்தமாக கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரம், ரூபா 597,225,000 நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இணைந்ததாக கிழக்கில் பாதிக்கப்பட்ட 17 கல்வி வலயங்களை சேர்ந்த 346 பாடசாலைகளுக்காக ரூபா 253,859,000 ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அம்பாறையில் 07 வலயங்களை சேர்ந்த 87 பாடசாலைகளும், மட்டக்களப்பில் 05 வலயங்களை சேர்ந்த 113 பாடசாலைகளும், திருகோணமலையில் 05 வலயங்களை சேர்ந்த 146 பாடசாலைகளுக்கும் இவ்வாறு மீள் புனர் நிர்மாணத்திற்காக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண உதவிகளை பெற்ற மக்கள்
மேலும் டிட்வா புயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட நெற்பயிர்ச் செய்கைக்கான அழிவுகள் மற்றும் அதற்கான நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டமை தொடர்பில் மாகாண விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.றினோஸை தொடர்பு கொண்டு வினவிய போது,
"கிழக்கில் மொத்தமாக 21,272 ஹெக்டேயர் நிலப்பரப்புக்களை சேர்ந்த 33,640 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அடிப்படையில் பார்க்கின்ற போது, திருகோணமலை மாவட்டத்தில் 15,389 ஹெக்டேயர் பரப்பளவை கொண்ட 23516 விவசாயிகளும், மட்டக்களப்பில் 2961 ஹெக்டேயரை சேர்ந்த 5009 விவசாயிகளும், அம்பாறையில் 2922 ஹெக்டேயரை சேர்ந்த 5115 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இதுவரைக்கும் சுமாராக 3190 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டு தொகைகளாக வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
கடந்த 24.12.2025-ஆம் திகதி வெளியான அறிக்கையின் பிரகாரம், கமநல சேவைகள் அபிவிருத்தி நிலையம் ஊடான தரவுகளுக்கமைய, இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
விவசாய செய்கை அழிவு தொடர்பான சேத விபரங்களை கமநல அபிவிருத்தி திணைக்களத்தினர் இணைந்து விவசாய திணைக்களமும் மதிப்பீடு செய்துள்ளனர்.
விவசாய துறை அமைச்சரும் திருகோணமலைக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டுள்ளார்.
அதே சமயம், கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் நெற்பயிர்ச் செய்கையில் சிறந்து விளங்குவதுடன் விவசாயத்தை நம்பியே விவசாயிகள் அன்றாட ஜீவனோபாயத்தை கடத்துகின்றனர்.
முற்றாக அழிந்து போன நெற்பயிர்ச் செய்கை
நெற்பயிர்ச் செய்கைகளுக்காக அழிவடைந்த வயல் நிலங்களில் மீண்டும் விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் பலர் தங்களுக்கான திருப்தி இல்லை என்றும் அங்கலாய்க்கின்றனர்.
கடன்பட்டு செய்த விவசாய செய்கை மூலமாக விளைச்சலை எதிர்பார்த்து விதைத்திருந்த போதும் கூட இவ்வாறான பாரிய வெள்ளம் ஏற்பட்டு அழிவுகளை சந்திக்க வேண்டும் என அவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது, விவசாயிகளின் மனநிலையில் மாற்றங்களை கொண்டு வருவதும் பொருத்தமாக இருக்கும் என இந்த வேலையில் ஒரு கனம் சிந்திக்க தூண்டுகிறது.

இது போன்ற பேரிடர் காரணமாக மீள முடியாது துயரில் பலர் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கும் நிலையில், பாடசாலை மாணவர்கள் உட்பட சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டை கட்டியெழுப்புவது அவசியம்
UNICEF இன் 2025.12.05-ஆம் திகதி வெளியான தரவுகளின் அடிப்படையில், மொத்தமாக நாடு தழுவிய ரீதியில் 462,274 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு மீண்டும் பழைய நிலையை அடைய சர்வதேச நாடுகளின் உதவிகளும் ஒத்தாசைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அனர்த்தங்களில் இருந்து முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக உயிரிழப்புக்களை பாதுகாக்க முடியும்.
அதே சமயம், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக பல உதவித் தொகைகள் வழங்கப்படுவதாக அரசாங்கம் மூலம் அறிவிக்கப்பட்ட நிலையில், சிலரின் ஆதங்கம் தங்களுக்கு நஷ்ட ஈட்டு தொகை கிடைக்கவில்லை என்பது தான். மக்களுக்காக வழங்கப்படும் நிவாரணங்களை பெற்றுத்தரக்கோரிய போராட்டங்களும் இடம் பெற்றன.
எனவே, நிவாரண நஷ்ட ஈடு தொடர்பில் பொறி முறை ஒன்றை வழங்கி பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களுடன் இணைந்த வாழ்வாதாரங்களை மேம்படுத்தி விரைவில் நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் உறுதிபூண வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 29 December, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.