விவசாய அமைச்சரின் பங்கேற்புடன் யாழில் விசேட கூட்டம்!
புதிய இணைப்பு
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் பங்கேற்புடன் யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (15) காலை 9 மணிக்கு கூட்டம் இடம்பெறவுள்ளது.
கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் உள்ளிட்ட விவசாய அமைச்சு மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது விவசாயத்துறை சார்ந்த பல்வேறு பட்ட விடயங்கள் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வின் தொடக்க நிகழ்வு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவினால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று (14.10.2023) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான காலபோக நெற்செய்கையினை மேற்கொண்டு வெள்ளம், வறட்சி, காட்டுயானை மற்றும் நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இழப்பினை சந்தித்த விவசாயிகளுக்கான மதிப்பீட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் இழப்பீட்டு தொகைகள் விவசாய அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டு அதற்கான தொகைகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அதனை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
முதற்கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 16 விவசாயிகளுக்கு காசோலைகள் அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு 422 விவசாயிகளின் 363 ஏக்கர் விவசாய செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இழப்பீட்டினை சந்தித்துள்ள ஏனைய விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக்கணக்குகளில் இழப்பீட்டு காசோலை வைப்பிலடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள் : தீபன்