ஞான அக்கா வீட்டிற்கு தீவைக்கப்பட்ட சம்பவம்: 8 பேர் கைது
கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட வன்முறையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞான அக்காவின் வீட்டிற்கு தீவைத்த சம்பவம் தொடர்பில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் கடந்த வாரம் குழப்பம் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து அது வன்முறையாக மாறியது.
அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்ட முக்கிய உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. இதன் போது அநுராதபுரத்தில் உள்ள ஞான அக்காவின் ஹோட்டல் மற்றும் வீடு என்பவற்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஞான அக்காவின் வீட்டில் இருந்து பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளார்கள். இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து மூன்று தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் முழுவீச்சில் இடம்பெற்று வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.