கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன் - காதலிக்காக செய்த செயல்
கொழும்பில் காதலிக்காக பேருந்து ஒன்றை கடத்திய சிறுவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை கடத்தி 15 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருந்தின் சாரதிகள் ஆசிய கிண்ண இறுதி கிரிக்கட் போட்டியை பார்வையிடுவதற்காக அருகில் நிறுத்தி வைத்த பேருந்தே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளது.
பேருந்து கடத்தல்
சம்பவம் தொடர்பில் சாரதிகள் உடனடியாக இது தொடர்பில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் உடனடியாக விசாரணையை ஆரம்பித்தனர்.
நள்ளிரவு 12.30 மணியளவில் கெஸ்பேவ – பிலியந்தலை வீதியின் வீதித்தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அப்பகுதியினூடாக பயணித்த பேருந்து மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை நிறுத்தியுள்ளனர். அது, கடத்தப்பட்ட பேருந்துதான் என்பதை பொலிஸார் உறுதி செய்தனர்.
விரைந்து செயல்பட்ட பொலிஸார், பேருந்தை நிறுத்தி, தப்பி ஓட முயன்ற சிறுவனை துரத்திச் சென்று கைது செய்தனர். தனது காதலியை பார்க்க சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பொலிஸாரிடம் சிக்கியது தெரியவந்தது.
பொலிஸாரிடம் சிக்கிய சிறுவன்
அப்போது நடந்த சம்பவம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். நேற்று இரவு 8 மணியளவில் மொரகஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் தனது காதலி தன்னை சந்திக்க வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்ததாகவும் அதன்படி, காதலியை சந்திக்க பேருந்தில் பயணிக்க பேருந்து நிலையத்திற்கு வந்ததாகவும் அப்போது பேருந்துகள் இல்லாததால் செய்வதறியாது தவித்ததாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார்.
பின்னர் பேருந்து ஒன்றில் சாவி இருந்ததால் அதனை இயக்கி மொரகஹேன பகுதியில் உள்ள தனது காதலியை சந்திக்க சென்றதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான்.
சந்தேக நபர் இதற்கு முன்னரும் தனது காதலியை சந்திப்பதற்காக பேருந்து ஒன்றை கடத்திச் சென்றுள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.