கொழும்பு மாநகர சபை சொஹாரா விவகாரத்தில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சொஹாரா புஹாரியை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) வெளியிட்ட கடிதத்தை நடைமுறைபடுத்துவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சொஹாரா புஹாரியை SLMC, கட்சியில் இருந்து நீக்கியிருந்தது.
மேயர் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த பின்னர் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.
தடை உத்தரவு
இந்த தடை உத்தரவு 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும், மேலும் மனு தொடர்பாக தங்கள் நிலைப்பாட்டை முன்வைக்குமாறு பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட SLMC தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பொதுச் செயலாளர் நிஜாம் காரியப்பர் ஆகியோருக்கு அறிவிப்பு அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 31ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வாக்களித்ததாக சொஹாரா புஹாரி தெரிவித்தார்.
அன்றைய தினம், தனது கட்சி உறுப்பினர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் மூலம் விளக்கங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கிடைத்த கடிதம்
அதேவேளை, ஜனவரி 2 ஆம் திகதி தொடர்புடைய கடிதம் தனக்குக் கிடைத்ததாக சொஹாரா புஹாரி கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, ஜனவரி 9ஆம் திகதி, தனது ஆட்சேபனைகளை வழங்க கட்சி தலைமையகத்திற்குச் சென்றபோது, அவை விரோதமான முறையில் நிராகரிக்கப்பட்டன, பின்னர், கட்சி உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான விசாரணை இல்லாமல் தனது கட்சி உறுப்பினர் பதவியை இரத்து செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்றும், எனவே அந்த முடிவை செல்லாது என்று அறிவிக்குமாறும் மனுவில் கோரப்பட்டது.