கொழும்பு – கண்டி வீதி மீண்டும் திறப்பு! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு-கண்டி பிரதான வீதி, இன்று காலை 06.00 மணி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை(10.11.2026) கண்டி-கொழும்பு பிரதான வீதியின் கடுகண்ணாவ பகுதியில் வீதியில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து வீதியை மறைத்திருந்தன.
அதன் விளைவாக, நேற்று மாலை முதல் கனேத்தென்ன பகுதியிலிருந்து கொழும்பு-கண்டி வீதியை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு
இன்று காலை நிலைமையைக் கண்காணித்த பின்னர், கொழும்பு-கண்டி வீதியை போக்குவரத்திற்காக மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மழை பெய்யும் பட்சத்தில் இரவு நேரங்களில் இந்த வீதியை மூடி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், யட்டிநுவர பிரதேச செயலகம், பொலிஸார் மற்றும் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஆகியோர் இன்று காலை குறித்த இடத்தைப் பார்வையிட்டனர்.

அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் குறித்தப் பகுதியில் ஒரு வீதியை மாத்திரம் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், குறித்த வீதியில் தற்போது பாறைகள் மற்றும் மண் ஆகியவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எனவே, முடிந்தவரை குறித்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியைப் பயன்படுத்தவும். இல்லையெனில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படக் கூடும்.
இன்று மாலை அல்லது இரவு வேளையில் பலத்த மழை பெய்யுமானால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இரவு நேரத்தில் இந்த வீதியை மூடி வைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக தகவல் - ஆனதி