கொழும்பை உலுக்கிய படுகொலை - பிரான்ஸில் இருந்து தீட்டப்பட்ட திட்டம் - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள்
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு தற்போது பிரான்ஸில் பதுங்கியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான குடு அஞ்சு என்பவரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் குடு அஞ்சுவின் நெருங்கிய நபர் ஒருவர் இரத்மலானை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தத் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கி சூடு
இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் முகமது அஸ்மின் மொஹிதீன் என்ற 54 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரை குறிவைத்து பிற்பகல் 1.30 மணியளில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பியோடியுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் மன்னன் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் விதம் அருகிலுள்ள கட்டடமொன்றின் சிசிடிவி கமராவிலும் பதிவாகியுள்ளது.