கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஆரம்பம்
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
வளமான நாடு – அழகான வாழ்க்கையை உருவாக்கும் அரசின் திட்டத்துக்கு இணங்க, கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் 425 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி இந்த நவீனமயமாக்கல் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.
60 ஆண்டுகளின் பின்னர் இந்த பேருந்து நிலையம் முழுமையாக மூடப்பட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மற்றும் கவர்ச்சிகரமான பேருந்து நிலையமாக முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இது என்பது விசேட அம்சமாகும்.
நிறுவனங்களின் பங்களிப்பு
இலங்கை விமானப் படையின் நேரடி ஆளணி பங்களிப்பு மற்றும் கொழும்பு மாநகர சபை, இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ,வீதி அபவிருத்தி அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட ஏனைய தொடர்புடைய நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் இது செயற்படுத்தப்படுகின்றது.
அதேநேரத்தில் தேசிய புத்திஜீவிகள் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளும் இதில் தன்னார்வமாகப் பங்கேற்கின்றன. இந்தத் திட்டம் 2026 ஏப்ரல் மாதத்தில், சிங்கள - தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்னர் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தாமல் ஒரு நாடு வளர்ச்சியடைய முடியாது என்று கூறினார்.
பொதுப் போக்குவரத்து என்பது ஒரு நாட்டின் பொருளாதார செயல்முறையின் முக்கிய பகுதியாகும் என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், மக்களுக்கு வசதியான மற்றும் குறைந்த செலவுள்ள பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதை விரைவுபடுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
நினைவுப் பலகையைத் திறந்து வைத்து கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைப்புப் பணிகளைத் தொடங்கி வைத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அந்த வளாகத்தைச் சுற்றிப் பார்வையிட்டார்.
பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஸ்வி சாலி, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப், கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு, கிளீன் ஸ்ரீலங்கா செயலக அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.










