கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக செயற்பட்டோர் சந்தா பணத்துக்காக ஒப்பந்தம் வேண்டும் என்கின்றனர்: ஜீவன் தொண்டமான்
கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக செயற்பட்ட சங்கங்களும், அரசியல் கட்சிகளும் இன்று சந்தா பணத்துக்காக ஒப்பந்தம் வேண்டும் என்கின்றனர் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman ) தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இன்று (11) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
நான் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது கிடையாது அரசியலை விடவும் சிறந்த நிர்வாகத்தையே செய்ய விரும்புகின்றேன்.
நான் அமைச்சு பதவியை ஏற்கும்போது அந்த அமைச்சு 2 ஆயிரத்து 300 மில்லியன் ரூபா கடன் சுமையில் இருந்தது.
நல்லாட்சியின்போது 4 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தில் 699 வீடுகள் தான் மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன. நான் அமைச்சு பதவியை ஏற்ற பின்னர் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன எஞ்சியவை இம்மாதத்துக்குள் கையளிக்கப்படும்.
மேலும் எனது அமைச்சின் புதிய வேலைத்திட்டங்கள் அடுத்தவருடம் முதல் ஆரம்பமாகும் என்றார்.