பிள்ளையார் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் மௌனம் காக்கும் வன்னி எம்.பிகள் - மக்கள் விசனம்
மன்னாரில் பிள்ளையார் சிலை அகற்றப்பட்டு அந்தோனியார் சிலை வைக்கப்பட்ட சம்பவம் குறித்து வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மன்னார் - மடு - பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்திற்கு அண்மையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் மரத்தின் கீழ் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்தது.
அப்பகுதி காட்டுப்பகுதியென்பதால் மதங்கள் கடந்து அப்பகுதியால் செல்பவர்கள் அப்பகுதியிலிருந்த பிள்ளையார் சிலையை வணங்கிவிட்டுச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் சிறிய கோயில் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், முதல் கட்டமாக மூலஸ்தானம் அமைக்கப்பட்டு அதற்குள் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்தது.
தற்போது குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் சிலையை சில விஷமிகள் தூக்கிவிட்டு அந்தோனியார் சிலையை வைத்துள்ளனர். குறித்த சம்பவம் இந்து மக்களின் மனங்களில் பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வர வளைவு தொடக்கம் பல்வேறு பிரச்சனைகளை இந்துக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். யார் இவ்வாறான செயற்பாட்டைச் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். மத உரிமைகளை மதிக்க வேண்டும்.
இவ்வாறான நிலையில் வன்னி மாவட்டத்தில் அதி கூடிய வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், வினோதரராதலிங்கம் என மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்தது.
குறித்த சம்பவத்தால் மனவேதனை அடைந்துள்ள இந்து மக்கள் குறித்து மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் எந்தவித அறிக்கையும் விடாமல் மௌனம் காப்பது இந்து மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் கிறிஸ்தவர்களாகவும், ஒருவர் அதில் ஒருவரைச் சார்ந்தும் இருப்பதால் தமது மதம் சார்பாக நின்று இந்து சமயம் தொடர்பில் கருத்து கூற விரும்பவில்லையா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் இந்துக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடரும் நிலையில் அந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.