மட்டக்களப்பில் இழுத்து மூடப்பட்ட சிகை அலங்கார நிலையங்கள்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச பிரிவில் உள்ள சிகை அலங்கார நிலையங்கள் மாணவர்களுக்கு நேர்த்தியான முறையில் முடி வெட்டாத காரணத்தினால் இழுத்து மூடப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை நேற்று(24.04.2026) இடம்பெற்றுள்ளது.
திடீர் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட இரு சிகை அலங்கார நிலையங்களில் பாடசாலை மாணவர்களுக்கு நேர்த்தியான முறையில் முடி வெட்டாத சிகை அலங்கார நிலையங்களுக்கு நேற்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் மே.வினோராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று கடுமையாக எச்சரித்து இரு சிகை அலங்கார நிலையங்களையும் இழுத்து மூடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை அதிபர்கள், மற்றும் பெற்றோர்கள் பிரதேச சபை தவிசாளரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, பொதுச் சுகாதார பரிசோதகர் ஊடாக இந்த திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதேச சபை தவிசாளர் இதன்போது தெரிவித்தார்.
முறைசார் திட்டங்கள்
எமது பிரதேசத்திற்குட்பட்ட சுமார் 24 சிகை அலங்கார நிலையங்களின் உரிமைகளுர்களுடன் கலந்துரையாடி அவர்களுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு முறையாக முடி வெட்ட வேண்டும் உள்ளிட்ட சில திட்டங்களை நாம் வகுத்திருந்தோம்.
அத்திட்டங்களைக் கடைப்பிடிக்காத சிகை அலங்கார நிலையங்களின் வியாபாரச் சன்றிதழ் நிறுத்தப்படும் எனவும் நாம் தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில் சில சிகை அலங்கார நிலையங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு முறையற்ற விதத்தில் முடி வெட்டப்படுவதாக எமக்கு 4 பாடசாலைகளால் எழுத்து மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தன.

அக்கோரிக்கைகளுக்கு அமைய நாம் நேரில் அந்த சிகை அலங்கார அந்நிலையங்களுக்குச் சென்று அவற்றை உடன் அமுலுக்கு வரும் வகையில் இழுத்து மூடியுள்ளோம்.
மேலும் மாணவர்களுக்கு எவ்வாறு முடிவெட்ட வேண்டுமோ அந்த முறைக்கமையவே முடிவெட்ட வேண்டும். அதனை மீறி வித்தியானமான வடிவங்களில் முடி வெட்ட முடியாது.
எமது சமூகத்தில் சீர்கேடான, தவறான நடைமுறைகளுக்கு சிகை அலங்கார உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்களேயானால் எதிர்காலத்தில் அவ்வாறான அனைத்து சிகை அலங்கார நிலைங்களும் மூடப்படும் என தவிசாளர் தெரிவித்துள்ளார்.