வானிலையில் நிகழவுள்ள மாற்றங்கள்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 09.03.2025 முதல் 14.03.2025 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமான மழை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மார்ச் மாத மழை வீழ்ச்சியானது அயன இடை ஒருங்கல் வலய செயற்பாட்டினால் தூண்டப்பட்ட மேற்காவுகை (வெப்பச்சலனம்) செயன்முறை மூலம் கிடைப்பதனால் பரவலான இடி மின்னல் நிகழ்வுகளுடன் இணைந்ததாகவே இம்மழை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பனிமூட்டமான நிலை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.