தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிரமதானப் பணிகள் இன்றையதினம் (20) தேவிபுரம் ஆ பகுதியில் அமைந்துள்ள துயிலும் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மாவீரர் துயிலுமில்ல பணிக்குழுவினர் மற்றும் மாவீரர்களது பெற்றோர் உறவினர்கள் இணைந்து உயிர் நீத்த உறவுகளுக்கான அஞ்சலி செலுத்திவிட்டு குறித்த சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல துயிலும் இல்லங்கள் காணப்படும் நிலையில் வருடம்தோறும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நவம்பர் 27 இல் அனைத்து துயிலும் இல்லங்களிலும் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் சென்று உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவிற்கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம், ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்,வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம், ஆகிய துயிலும் இல்லங்களிலும் இறுதி யுத்த காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம், இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம், தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம், போன்ற மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மேலும் பல பொது இடங்களிலும் இம்முறையும் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |