மஹர சிறைச்சாலையில் வெடித்த மோதல் - உறவினர்களுக்கு கைதிகளிடமிருந்து சென்ற அவசர அழைப்பு
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களுக்கு பின்னர் கைதிகள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கைபேசிகள் மூலம் நிலைமை குறித்து தகவல் வழங்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறையின் முற்பகுதிக்கு உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து, அவர்களை பயன்படுத்தி போராட்டத்தை நடத்த கைதிகள் திட்டமிட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
சிறையின் நிர்வாக பணிகள் கட்டுப்பாட்டில்
மஹர சிறைச்சாலையில் கைபேசிகள் மிகவும் சாதாரணமாகிவிட்டதாகவும், பழைய கைதிகள் கைபேசிகளை புதிய கைதிகளுக்கு அதிக விலைக்கு அழைப்புகளை மேற்கொள்ள கொடுப்பதாகவும் கூறப்படுகின்றது.

கைபேசிகளில் இருந்து அழைப்புகளை மேற்கொள்வதற்காக செலுத்தப்படும் பணம், பழைய கைதிகளால் வழங்கப்பட்ட கணக்குகளில் வரவு வைக்கப்படுவதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், சிறை வட்டாரங்களின்படி, மஹர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், சிறையின் பெரும்பாலான நிர்வாக பணிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
மஹர சிறையில் கைதிகளிடையே கைபேசி பயன்பாடு குறித்து தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், சில சிறை அதிகாரிகள் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு கைதிகளுக்குக் கைபேசிகளை வழங்கியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.