சிங்கள அரசின் அத்துமீறலுக்கு இந்திய அரசு பதிலடி கொடுக்க வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கை முள்ளிவாய்க்காலில் இறுதிகட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பொதுமக்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள சிங்களப் பேரினவாத அரசின் இந்த மாபாதக செயலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிங்களப் பேரினவாத அரசு, இந்திய அரசின் உதவியோடும், உலக நாடுகளின் உதவியோடும் ஈழத்தில் மிகப்பெரிய இன படுகொலையை அரங்கேற்றியது.
2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்ட இந்த இனப்படுகொலை 11 ஆண்டுகளை கடந்து விட்டது.
இந்த இனப்படுகொலை நாளை ஆண்டுதோறும் மே மாதத்தை, தமிழகத் தமிழர்களும், ஈழத்தில் உள்ள தமிழர்களும் அனுசரித்து வருகின்றனர்.
இதற்காக ஈழத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இருக்குமிடத்தில், தமிழர்கள் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இருக்கும் இடத்திற்கு வந்த இலங்கை ராணுவம் மற்றும் காவல் துறை, உளவுத்துறையினர், நினைவுச் சின்னத்தை இரவோடு இரவாக இடித்து தள்ளியுள்ளனர்.
மேலும், 2000 கிலோ எடையுள்ள நினைவு கல்லையும் அவர்கள் அப்புறப்படுத்தி உள்ளனர். ஈழப் போரில் ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக்கொண்டு இருக்கும் வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும் இன வெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்துக்குரியது.
சின்னங்களை அழிப்பதன் மூலம், தமிழ் மக்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கும் போராட்டத்தின் நினைவுகளை அகற்றிவிட முடியாது என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
எனவே சிங்களப் பேரினவாத அரசின் இந்த அத்துமீறலுக்கு இந்திய அரசு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
மேலும், இடிக்கப்பட்ட நினைவு முற்றத்தை உடனடியாக சிங்களப் பேரினவாத அரசு கட்டியமைக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
