இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAASL) பொதுமக்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் பரப்பப்பட்டு வரும் போலி மற்றும் தவறான தகவல்கள் தொடர்பாகவே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAASL) விடுத்துள்ள குறித்த அறிவிப்பில், தற்போது பகிரப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை, தவறானவை மற்றும் அங்கீகரிக்கப்படாதவை என்று (CAASL) தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மேலும், சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியால் எந்தவொரு ஊடக நிறுவனத்திற்கோ அல்லது சமூக ஊடகத் தளத்திற்கோ அத்தகைய தகவல்கள் எதையும் வழங்கவில்லை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் புனையப்பட்ட தகவல்களை உருவாக்கி, பரப்பிய தனிநபர்கள் மற்றும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான தகவல்களைப் பகிரும்போது பொறுப்புடன் செயல்படுமாறும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகள் மற்றும் அதிகாரசபையின் உத்தியோகபூர்வ தகவல் தொடர்பு வழிகள் மூலம் விவரங்களைச் சரிபார்க்குமாறும் பொதுமக்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்களை (CAASL) வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்களின் நம்பிக்கை, நிறுவனங்களின் கண்ணியம் மற்றும் அரச நிறுவனங்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், தவறான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் பரவுவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரசபை மேலும் கூறியுள்ளது.
இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ள டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை - மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் அட்டைகள் ஒழிப்பு