இந்தியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பிரஜாவுரிமை வழக்கில் சாதகமான தீர்வு - சிறீதர்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தின் மாநில செயலாளர் சட்டத்தரணி லயன் எம்.சிறீதர் மற்றும் லி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (08.10.2022) காலை இடம்பெற்றுள்ளது.
தமது எதிர்கால நலன் கருதியும், இலங்கை பிரச்சினையிலும் மிகவும் அக்கறையாக செயற்பட்டதாக அவர் தெரிவித்தார் என வலி. மேற்கு தவிசாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிரஜாவுரிமை
அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவிலே வசித்து வருகின்ற இலங்கை மக்களுக்கு இந்தியாவில் பிரஜாவுரிமை கிடைக்கவேண்டும் என்றும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும் அண்மையிலே அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கின் மூலம் தமக்கு சாதகமான தீர்வு கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
அந்த தீர்வின் ஊடாக 30 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக இந்தியாவில் வசிக்கின்ற தமிழ் மக்கள் இந்தியாவின் கடவுச் சீட்டுக்களை பெற்று வெளிநாடுகளுக்கு போய்வரக்கூடிய வாய்ப்புகள் இனி கிடைக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
தீர்வு கிடைக்க வேண்டும்
எங்களுடைய இலங்கை பிரச்சினை தொடர்பாக நீங்கள் அதிக கரிசனை காட்ட வேண்டும் நாங்களும் நீண்ட காலத்திற்கு இப்படி வாழமுடியாது.
எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதற்கான செயற்பாடுகளை முழுமையாக உங்களது கட்சியும், உங்களது தலைவர் கமல்ஹாசனும் முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம்” என்று வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
