வாழைச்சேனை சந்தியில் சிலையுடன் சுற்றுவட்டம் - வியாழேந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்
வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் சிலையுடன் கூடிய சுற்று வட்டம் அமைக்கும் நடவடிக்கை தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கல்குடா அல் கிம்மா நிறுவனம் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் இன்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும்,
இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு நானும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்துவரும் ஒருவன் என்ற வகையிலும் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சியின் ஆதரவாளன் என்ற காரணத்தினாலும் தங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகின்றேன்.
தங்களின் ஒதுக்கீடு மற்றும் ஏற்பாட்டில் குறித்த சந்தியில் ஒரு சமூகம் சார்ந்த சிலையுடன் கூடிய சுற்று வட்டம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதானது கல்குடா முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சகல இன மக்களும் சகோதர வாஞ்சையோடு, முரண்பாடுகளற்ற சமூகமாக வாழ்வதற்கான வழிகாட்டுதல்களை செய்து கொடுக்க வேண்டிய தாங்கள் இவ்வாறான ஒற்றுமையைச் சீர் குலைக்கும் செயற்பாட்டினை செய்வது பெரிதும் கவலையளிக்கிறது.
மட்டக்களப்பு மாநகரில் உள்ள மூன்றுக்கும் அதிகமான சுற்று வட்டங்கள் மற்றும் கிரான், செங்கலடி உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள சுற்று வட்டங்கள் ஆகியவை கூட இதுவரை தனித்துவமான கலாச்சார வெளிப்பாடுகளைக் கொண்டவையாக அமைக்கப்படாத நிலையில், குறித்த சந்தியில் மட்டும் இவ்வாறான சிலை வைத்தல் நடவடிக்கையை மேற்கொள்வதானது திட்டமிட்டு இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் முயற்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
மேலும் தாங்கள் ஆளும் கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நிலையில், இவ்வாறான பொருத்தமற்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களின் எண்ணப்பாட்டிற்கும் விருப்பத்திற்கும் எதிரானது என்பதையும் தங்களுக்குச் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.
தவிரவும் இது ஒரு தனித்துவமான சமூக வர்த்தக நிலையங்களையோ குடியிருப்புக்களையோ கொண்ட ஒரு இடத்தின் மையம் அல்ல என்பதையும் தாங்கள் அறிவீர்கள் எனவும் நம்புகின்றேன்.
ஆகவே இன முறுகலுக்கு வித்திடும் வகையிலான இச்செயற்பாட்டைத் தவிர்த்து, சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய வகையில், சகல சமூகத்தவர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய, பொதுவான ஒன்றைப் பிரதிபலிக்கச் செய்யும் வகையில் அழகிய வடிவில் குறித்த சுற்று வட்டத்தை அமைக்குமாறு தங்களைக் கௌரவமாகக் கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
