யோஷித்த ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்சவை விசாரணையொன்றுக்காக முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
மகிந்த ராஜபக்வின் இரண்டாம் புதல்வரும், கடற்படை அதிகாரியுமான யோஷித்த , மகிந்தவின் மெய்ப்பாதுகாவலரான ஓய்வுபெற்ற இராணுவ கேணல் நெவில் வன்னியாரச்சி ஆகியோருக்கு எதிராக பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் , குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதனடிப்படையில் நேற்றைய தினம் (16.12.2024) வாக்குமூலம் பெறுவதற்காக யோஷித்த மற்றும் நெவில் வன்னியாரச்சி ஆகியோருக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
எனினும் நேற்றைய தினம் இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்து கொண்டதுடன், வேறொரு தினத்தை ஒதுக்கித் தருமாறு தங்கள் சட்டத்தரணிகள் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மகிந்த ராஜபக்சவிடம் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றிய ஓய்வுபெற்ற கேணல் நெவில் வன்னியாரச்சிக்கு அதிவேகப் பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் 12 சொகுசு பேரூந்துகள், 08 ட்ரக் வண்டிகள், மூன்று எரிபொருள் நிலையங்கள் உள்ளிட்ட அசையாச் சொத்துக்களும், 32 வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 47 நிதிநிறுவனங்களில் முதலீடுகளும் உள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2005 தொடக்கம் 2014ம் ஆண்டுவரையான காலப்பகுதிக்குள் நெவில் வன்னியாரச்சி சட்டவிரோதமாக சேர்த்துக் கொண்ட சொத்துக்கள் இவையாகும்.
இதனடிப்படையில் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு நெவில் வன்னியாரச்சிக்கு எதிராக ஐந்து வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |