விடுதலைப் புலிகளை 'பயங்கரவாதி' நாவல் மீளுருவாக்குகிறதா: எழுத்தாளர் தீபச்செல்வனிடம் ரிஐடி தீவிர விசாரணை
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய 'பயங்கரவாதி' நாவல், விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் எழுதப்பட்டதா என்பதை ஆராயும் நோக்கில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளது.
கிளிநொச்சி - பரந்தனில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவில் இன்று(16) தீபச்செல்வனிடம் இரண்டு மணி நேர விசாரணை இடம்பெற்றுள்ளது.
தீபச்செல்வன் எழுதியுள்ள பயங்கரவாதி நாவல் தொடர்பில் பல கேள்விகளை இதன்போது பயங்கரவாத தடுப்புப் பிரிவு எழுப்பியுள்ளது.
கற்பனை கதாபாத்திரங்கள்
நாவலில் இடம்பெறும் மாறன் என்ற கதாபாத்திரம் யார்? இப்போது எங்கே உள்ளார்? என்றும் நாவலில் இடம்பெறும் இராணுவக் கதாபாத்திரங்கள் யாரைக் குறித்துள்ளன என்றும் கேட்கப்பட்டதாக தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனைத்து கதாபாத்திரங்களும் கற்பனையானவை என்று தாம் பதில் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த நாவலில் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் கருத்துக்கள் உள்ளனவா என்றும் விசாரணை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, அப்படியான கருத்துகள் நாவலில் இல்லை என்றும் கடந்த காலத்தில் நடந்த விடயங்களையே நாவல் பேசுவதாகவும் தீபச்செல்வன் பதில் அளித்துள்ளார்.
தமிழர்களை புரிந்து கொள்ளும் வழி
போரில் தாய் - தந்தையரை இழந்த ஒரு குழந்தை அதிலிருந்து தப்பி கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்வதையும் அங்கு மாணவத் தலைவராகும் அந்த இளைஞன் பின்னர் போரால் கொல்லப்படுவதையும் தனது நாவல் பேசுவதாக தீபச்செல்வன் விளக்கமளித்துள்ளார்.
மேலும், யாழ். பல்கலைக்கழகத்தில் சில மாணவத் தலைவர்களும் மாணவர்களும் கொல்லப்பட்ட நிலையில் அந்தப் பின்னணியை வைத்து மாறன் என்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாகவும் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
பிழையான இராணுவத்தினர் மத்தியில் உள்ள நல்ல இராணுவ அதிகாரிகளையும் விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட இராணுவ சிப்பாய்களையும் பற்றி பயங்கரவாதி நாவல் பேசுவதாகவும் இதனை சிங்கள மக்கள் வாசித்தால் தமிழர்களை புரிந்து கொள்ள வழி வகுக்குமே தவிர, இன வேறுபாட்டை ஒருபோதும் ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எந்த சூழ்நிலையிலும் கல்வியை கைவிடாத மாறன் என்ற கதாபாத்திரம் வழியாக இந்த நாவல் கல்வியை பேசகிறது என்றும் இனிவரும் காலத்தில் போரும் மரணங்களும் அழிவுகளும் இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த நாவலை தாம் எழுதியுள்ளதாகவும் தீபச்செல்வன் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |