முன்னாள் தவிசாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் CID விசாரணை
மன்னார் நகர சபை தவிசாளர் டானியல் வசந்தன் முன்னாள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் (CID) கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அழைப்பிற்கமைய, குறித்த இரு தினங்களும் காலை 9.30 மணியளவில் குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையான மன்னார் நகர சபையின் தவிசாளர் மாலை 5 மணி வரை வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொழும்பில் வைத்து நேற்று (21.04.2026) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
CID-க்கு அழைக்கப்பட்ட முன்னாள் தவிசாளர்
தொடர்ந்து பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களாக கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் (CID) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், முன்னாள் தவிசாளர் உட்பட முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சைனா பஜார் கடைகளை ஒதுக்கியதில் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், அது தொடர்பான அனைத்து ஆவணங்களும் நகலெடுக்கப்பட்டு, அதில் தவிசாளரின் கையொப்பம் மற்றும் திகதி பெறப்பட்டுள்ளது.
நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த விவகாரத்தை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளனர். எனவே, அடுத்த வாரங்களில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இது குறித்த நேரடி விசாரணைகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்
இந்த விசாரணையின் அடுத்த கட்டமாக நகர சபை செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகியோர் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட உள்ளனர்.
முழுமையான விசாரணைகளுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்யவும், அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தரவும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மன்னார் மக்களின் வரிப்பணம் முறைகேடு செய்யப்படுவதைத் தடுத்து, அந்தப் பணத்தை மீண்டும் மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதே இந்த விசாரணையின் முக்கிய நோக்கம்.
தற்போதைய அரசாங்கம் ஊழல் வாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், இந்த விசாரணை சரியான பாதையில் சென்று நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.