சீன கப்பல் விவகாரம்! துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை - வெளிச்சத்திற்கு வந்த தகவல்
சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள சீனாவின் ஆராய்ச்சி கப்பல் துறைமுகத்திற்கு வருவது சம்பந்தமாக இதுவரை எந்த அறிவிப்பையும் செய்யவில்லை என ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
சீனாவின் யுவான் வாங் 05 என்ற ஆய்வு கப்பல் இலங்கைக்கு வரவுள்ளமை தொடர்பில் துறைமுக அதிகாரிகளிடம் கேட்ட போதே அவர்கள் இதனை கூறியுள்ளனர்.
ஊடக செய்திகள் மூலமே கப்பல் வருவது பற்றி அறிந்தோம்
தற்போது வெளியாகியுள்ள ஊடக செய்திகள் மூலம் மாத்திரம் இது குறித்து அறிந்து கொண்டோம். அப்படியான கப்பல் ஒன்று துறைமுகத்திற்கு வருகை தருமாயின் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்று ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாக அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
யுவான் வாங் 05 ஆராய்ச்சி கப்பல் இலங்கை வருவதை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்த கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளதாக இந்தியாவின் என்.டி.டி.வி ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
இன்று முற்பகல் 9.30 அளவில் சீன கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.
கப்பலில் இருக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதளம் - மேலும் பல முக்கிய தகவல்கள்
சீனாவின் இந்த கப்பல் ஆராய்ச்சி கப்பல் என அடையாளப்படுத்தப்பட்டாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பெலஸ்டி ஏவுகணை மற்றும் செய்திமதிகளை ஏவுதல், கண்காணித்தல் ஆகிய வசதிகள் இருப்பதன் காரணமாக தமது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கலாம் என இந்திய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில், யுவான் வாங் 05 கப்பல் சீனாவின் புதிய தலைமுறை விண்வெளியை பின் தொடர்ந்து கண்காணிக்கும் கப்பல் என சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் விபரித்துள்ளனர்.
அத்துடன் இந்த கப்பல், சீனா மக்கள் விடுதலை இராணுவத்தின் மூலோபாய உதவி படைப்பிரிவால் கையாளப்படுவதாக சீனாவின் தகவல்கள் கூறுகின்றன.
சீன கப்பல் துறைமுகத்திற்கு வருவதற்கான அனுமதியை பெறவில்லை- அதிகாரம் பெற்ற அதிகாரி
இந்த நிலையில் துறைமுக அதிகாரி சபையின் அதிகாரம் பெற்ற அதிகாரியான ஹாபர் மாஸ்டர் கெப்டன் நிர்மால் பீ.சில்வா, சீனாவின் கப்பல் பற்றி தெரிவிக்கையில், ஆராய்ச்சி கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருவதற்கு எந்த அனுமதியையும் இதுவரை தான் வழங்கவில்லை எனக் கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழையும் அனைத்து கப்பல்களும் என்னிடம் அனுமதியை பெற வேண்டும். சாதாரண வர்த்தக கப்பல் என்றால், நேரடியாக என்னிடம் வந்து அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால், இது ஆராய்ச்சி கப்பல் என்பதுடன் அதற்கு ராஜதந்திர தொடர்புகள் இருப்பதால், வெளிவிவகார அமைச்சு மற்றும் ஏனைய பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் ஊடாக அனுமதியை பெற்று, அதன் பின்னர் என்னிடம் அனுமதியை பெற வேண்டும்.
இந்த கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் சீன கப்பல் துறைமுகத்திற்குள் வருவதற்கு அனுமதியில்லை.
எனினும் வெளிவிவகார அமைச்சு உட்பட பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் அனுமதியை வழங்கினால், நான் தேவையான அனுமதியை வழங்க முடியும். எனினும் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைவதற்கு குறைந்தது 9 ஆம் திகதியாவது அனுமதியை பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியான அனுமதி இதுவரை பெற்றுக்கொள்ளப்படவில்லை என நிர்மால் பீ.சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தமது கப்பல் இன்று 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டைக்கு வந்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை நிலை கொண்டிருக்கும் என சீன தெரிவித்திருந்தது.
இந்தியாவின் எதிர்ப்புக்கான அடிப்படை காரணமும் பாதுகாப்பு உடன்படிக்கையும்
சீனாவின் கப்பல் இலங்கைக்கு வரும் திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பை வெளியிடுவதற்கு ஒரு அடிப்படை காரணம் உள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின், அப்படியான சந்தர்ப்பத்தில், வெளிநாட்டு படையினருக்கு இலங்கையின் துறைமுகங்களை பயன்படுத்த இலங்கை, இடமளிப்பதை தடை செய்யும் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளன.
மறுபுறம் குறிப்பாக இந்தியா, இலங்கையின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் நான்கு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
இதன் காரணமாக சீனாவின் கப்பல் இலங்கைக்கு வரும் இந்த காலம் தொடர்பில் இந்தியாவுக்கு உணர்வு ரீதியான ஒரு சினம் ஏற்பட்டிருக்கலாம்.
இதனடிப்படையிலேயே இந்தியாவின் எதிர்ப்புகளுக்கு பின்னர், புதிதாக பதவிக்கு வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம், யுவான் வாங் 05 கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதை ஆலோசனை வழங்கப்படும் வரை ஒத்திவைக்குமாறு சீனத் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
