ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்குமாறு சீன ஜனாதிபதி கோரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதன் மூலம் அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் (MBS) மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போது, இந்தப் பாதையின் இயல்பு நிலை பிராந்திய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு அவசியமானது என அவர் வலியுறுத்தினார்.
ஆய்வாளர்களின் கருத்து
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சமூக ஊடகங்களில் "நான் போரில் வெற்றி பெற்று வருகிறேன்" எனப் பதிவிட்டு வரும் நிலையில், சீனாவின் இந்த நிதானமான அணுகுமுறை சர்வதேச அரங்கில் பெய்ஜிங்கைப் பொறுப்புள்ள ஒரு சக்தியாகக் காட்டிக்கொள்ளும் முயற்சியாக ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.
ஈரானின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும், அதன் எண்ணெயை 90 சதவீதம் வாங்கும் நாடாகவும் சீனா உள்ளது. அதேவேளை, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற வளைகுடா நாடுகளுடனும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனும் சீனா நெருக்கமான பொருளாதார உறவைப் பேணி வருகிறது.

போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் ஆர்வம் காட்டாத சீனா, தனது எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தரப்புடனும் நட்பைப் பேணும் பெய்ஜிங், மோதல்களைத் தீர்க்கும் பின்னணியில் இருந்து பல இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
எதிர்வரும் மே மாதம் ஜீ ஜின்பிங் மற்றும் ட்ரம்ப் சந்திக்கவுள்ள நிலையில், அமெரிக்காவுடனான வர்த்தக உறவையும் ஈரானுடனான நட்புறவையும் சமநிலைப்படுத்த சீனா முயன்று வருகிறது.
போருக்குப் பிந்தைய புனரமைப்புப் பணிகள் மற்றும் முதலீடுகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பதற்காக, வளைகுடா பிராந்தியத்தின் இரு முனைகளிலும் தனது செல்வாக்கைத் தக்கவைக்க சீனா திட்டமிட்டுள்ளது என்றார்.