இலங்கை வருகின்றார் சீன பாதுகாப்பு அமைச்சர்! - ஆறு மாதங்களில் இரண்டாவது உயர்மட்ட விஜயம்
சீன பாதுகாப்பு அமைச்சர் வீ ஃபெங் (Wei Fenghe) அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் பெய்ஜிங்கிலிருந்து கொழும்புவிற்கான இரண்டாவது உயர்மட்ட விஜயமாக இது கருதப்படுகின்றது.
எதிர்வரும் 27ம் திகதி இலங்கைக்கு வரும் சீன பாதுகாப்பு அமைச்சர் 29ம் திகதி தனது விஜயத்தை நிறைவு செய்வார் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் இயக்குநர் ஜெனரல் மொஹான் சமரநாயக்க இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட உயர் அதிகாரியுமான யாங் ஜீச்சி (yang jiechi) இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
அதன் பின்னராக சீன பாதுகாப்பு அமைச்சர் வீ ஃபெங் (Wei Fenghe) இன் இலங்கை விஜயம் இரண்டாவது உயர்மட்ட விஜயமாக கருதப்படுகின்றது.
தொற்று நோய் பரவலின் போது சீனா இலங்கைக்கு பெரும் உதவிகளை வழங்கியிருந்தது. அத்துடன், ஒரு பில்லியன் டொலர் கடன் மற்றும் 1.5 பில்லியன் டொலர் நாணய இடமாற்று வசதி மூலம் வெளிநாட்டு இருப்புக்களை உயர்த்த உதவியுள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கடந்த மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசி ஊடாக பேசியிருந்தார். தொற்றுநோய்க்கு பிந்தைய அபிவிருத்திக்கு ஆதரவளிக்க சீனா தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
இந்நிலையிலேயே, சீன பாதுகாப்பு அமைச்சர் வீ ஃபெங் (Wei Fenghe) அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
வீ ஃபெங் (Wei Fenghe) இன் இலங்கை விஜயம் அண்மைய மாதங்களில் பிராந்தியத்திற்கான இரண்டாவது விஜயமாகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை, சீனாவின் பெருந்தொகை முதலீட்டில் கொழும்பு துறைமுக நகரம் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் கொழும்பு துறைமுக நகரை நிர்வகிக்க முன்மொழியப்பட்ட, சிறப்பு சட்டங்கள் கொண்ட மசோதாவை சவாலுக்கு உட்படுத்தும் சுமார் 20 மனுக்கள் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
