சர்ச்சையை ஏற்படுத்திய சீன தூதுவரின் டுவிட்டர் பதிவு: யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொடுத்த பதிலடி
இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில், இலங்கைக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும் இலங்கைக்கான சீனத் தூதுவர், கருத்து வெளியிட்டமையை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடர்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவரின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக இன்று(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு யுத்தம்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு யுத்தத்தின் போது தமிழர்கள் அனுபவித்த துன்பங்களை சீனா நன்கு அறிந்திருக்கிறது.
ஐ.நா சபையின் அறிக்கையின் பிரகாரம், இனவழிப்பு யுத்தத்தின் இறுதி ஆறு மாத காலப் பகுதியில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களும் சிறுமிகளும் இலங்கை ஆயுத படையினரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 29 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார அலுவலகத்தின்படி, 90
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் போர் விதவைகள் தமிழர் பகுதிகளில் ஏராளமான
துன்பங்களை தொடர்ச்சியாக எதிர்க்கொண்டு வருகின்றனர்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் இலட்சக்கணக்கான இலங்கை படையினர் எமது தாயக பூமியை ஆக்கிரமித்து நிற்கின்றனர்.
யுத்தத்தின் பின்னர் எமது பாரம்பரிய தாயகத்தில் எம்மை சிறுபான்மை ஆக்குவதற்காக சிங்கள பௌத்த மக்களை குடியேற்றுவதற்கு எமது பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தல்
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) முன்னிலைப்படுத்துவதன் மூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதியைப் பெறுவதே எமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.
நேற்றைய தினம் தான் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சிவில் சமூகம், தொழிற்சங்கங்கள் மற்றும் நாம் கூட்டாக இணைந்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியிருந்தோம்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு ஐ.நா மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்தும் கடிதத்தை தமிழர்கள் ஐக்கியமாக அனுப்பிய அதே நாளில், சீனத் தூதுவர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக டுவிட்டர் பதிவை பதிவிட்டுள்ளார்.
சீன தூதரகத்தின் கருத்து
ஐநா மனித உரிமை பேரவையில் இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா, ஜேர்மனி உட்பட பல நாடுகள் தமிழ் மக்களுக்கு ஆதரவாக ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் நிலையில் சீனத் தூதரகத்தின் குறித்த கருத்தானது இலங்கையில் தமது ஆதிக்கத்தை பலப்படுத்துவதற்கு இலங்கை அரசை வசை பாடுவதாக அமைகிறது.
தமிழ் மக்கள் விரோத மனப்பான்மை கொண்டுள்ள சீனாவின் ஆதிக்கம் வடக்கு கிழக்கில் அதிகரித்து வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்ட தமிழராகிய நாம் சீன தூதுவரின் பொறுப்பற்ற இந்த டுவிட்டர் பதிவை குறித்து நாங்கள் மிகவும் வேதனையடைவதுடன் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த செய்கையானது "மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்தது போல்" உள்ளது. ஆகவே இலங்கைக்கான சீன தூதரகம் தாங்கள் டுவிட்டரில் வெளியிட்ட உள்ளடக்கத்தை திரும்பப் பெறுமாறு சீனத் தூதரை நாங்கள் வலியுறுத்துவதுடன், மேலும் வரவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் எங்கள் அழைப்பை ஆதரிக்குமாறும் அவரை வலியுறுத்துகிறோம்.
மாணவர் ஒன்றியத்தின் கேள்விகள்
சீனத் தூதுவர் தமிழ்ப் பகுதிகளுக்கு சென்று நேர்மையுடனா உதவிகளை வழங்கினார் என கேள்வி எழுப்புகின்றோம்.
நல்லூர் முருகன் கோவிலுக்கு நீங்கள் தமிழர் பாரம்பரிய உடையுடுத்தி வருகை தந்தது தமிழர்களை ஏமாற்றும் செயலா என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
நீங்கள் ஒரு பொறுப்புள்ள நாடாகச் செயற்படுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், மேலும் எங்கள் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க வேண்டாம் என்றும் எங்கள் துன்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழர்களைக் கொன்றவர்கள் மற்றும் தமிழ்ப் பெண்களை பலாத்காரம் செய்தவர்களையும் ஆதரிக்கக் கூடாது என வலியுறுத்துவதோடு ஐ.நாவில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் நேச நாடுகளை திசை திருப்ப முயலக் கூடாது எனவும் வலியுறுத்துகிறோம்.”என கூறியுள்ளனர்.



உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 28 நிமிடங்கள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
