இலங்கையின் மறுசீரமைப்பு ஒப்பந்தத்திற்கு சீனா ஆதரவு
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தீவின் பிரதமர், இன்று சீனாவுக்கு தமது பயணத்தை நிறைவு செய்துக்கொண்ட நிலையில், இலங்கையின் மறுசீரமைப்பு ஒப்பந்ததிற்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதம மந்திரி தினேஸ் குணவர்தன(Dinesh Gunawardena) கடந்த திங்கட்கிழமை சீனாவிற்கு விஜயம் செய்தார், அவர் சீனாவின் ஜனாதிபதியையும் சந்தித்து பேசியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு
இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் சுமார் 10 சதவீதத்தை சீனா கொண்டுள்ள நிலையில், குணவர்தனவின் பயணத்தின் போது, பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு நிகழ்ச்சி நிரலே அதிகமாக இருந்தது.
இந்தநிலையில் இலங்கையுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தவும், பிற கடனாளிகளுடன் நட்புறவான தொடர்பை பேணவும், சர்வதேச நாணய நிதியத்தில் சாதகமான பங்கை வகிக்கவும், நிதி நிவாரணத்தில் இலங்கைக்கு உதவவும், தமது நிதி நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும் சீனா தயாராக உள்ளதாக பீஜிங்கின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பினரும் போர்ட் சிட்டி கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள இணங்கியுள்ளனர்.
இரு தரப்பு ஒப்பந்தம்
முன்னதாக கடந்த டிசம்பரில் இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனா கொள்கையில் ஒப்புக்கொண்டது, ஆனால் கொழும்பு அல்லது பீய்ஜிங் இது தொடர்பான எந்த விபரங்களையும் வெளியிடவில்லை. அத்துடன் இரண்டு தரப்பும் இன்னும் ஒப்பந்தத்தை முடிக்கவும் இல்லை.
இந்தநிலையில் எதிர்வரும் ஏப்ரல் ஆரம்பத்தில் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு
இறுதி செய்யப்படும் என்று இலங்கை அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் கூறியதாக சர்வதச ஊடகமொன்று நினைவூட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |