இந்து சமுத்திர மேலாண்மை இனிச் சீனாவின் கையிலா!
அம்பாந்தோட்டையில் உள்ள சீனத் துறைமுகத்திற்கு வரும் சீனாவின் ஆய்வுக் கப்பலான யுவான் வாங்-5 சீனாவில் இருந்து புறப்பட்டு மலாக்கா நீரினையை கடந்து தமிழன் கடலினுள் (வங்கக்கடல்) பிரவேசித்து அம்பாந்தோட்டை சீனத்துறைமுகத்திற்குள் நங்கூரமிடப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் தென்னிந்தியாவை கண்காணிக்க வரும் உளவுக்கப்பல் என இந்தியா குற்றஞ் சாட்டுகிறது.
சீனக்கப்பலின் வருகையினால் இந்தியாவிலும், சர்வதேச ரீதியிலும் பெரும் செய்திப் பரப்புரைகள் இடம்பெறுகிறது.
இதனால் இந்துசமுத்திரத்தின் ஆதிக்க வலுச்சமநிலை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுவிட்டது என பல நாடுகளும் கவலை கொள்கின்றன. இந்தப் பின்னணியில் இந்து சமுத்திரத்தினுள், இந்து சமுத்திரத்தைச் சார்ந்திராத அந்நிய நாடுகளின் படைப் பிரவேசம் இந்தப் பிராந்தியதின் அரசியல், சமூக, பொருளாதாரத்தை மாற்றியமைத்துவிட்டது.
அந்த வரலாற்றியல் விளைவுகள் பற்றியும் ஆழமாக நோக்குவது அவசியமானது. வரலாற்றை கால வரையறை ஒழுக்கின்படி சம்பவங்களின் தொகுப்பாக எழுதுகின்ற, பார்க்கின்ற முறைமையே கீழைத்தேச அறிஞர்களிடம் உண்டு.
இந்த வரலாற்றியல் முறைமையிலிருந்து விடுபட்டு வரலாற்று நிகழ்வுகளை படிப்பினையாக கொண்டு வரலாற்றைப் எழுதவும், பார்க்கவும் வேண்டும். அதுவே வளர்ச்சிக்கான பாதையைத் திறந்துவிடும்.
அதுவே நாடுகளுக்காயினும் சரி, தேசிய இனங்களுக்காயினும் சரி பாதுகாப்பளிக்க கூடியது. அதுவே அவர்களின் எதிர்கால வாழ்வுக்கான வழிகாட்டியாகவும் அமையும். இன்றைய உலக ஒழுங்கு என்பது பொருள்சார் வர்த்தக ஒழுங்கு. வர்த்தகம் தமக்குச் சாதகமாக இல்லாவிட்டால் யுத்தம் தேவைப்படுகிறது. வர்த்தகம் பொருளை ஈட்டுவதற்கானது.
ஆரம்ப காலங்களில் பொருளை ஈட்டுவது என்பது எதிர்த்தரப்பின் மீது யுத்தத்தை தொடுத்து கொள்ளையடிப்பதுதான். அன்றைய பொருள் ஈட்டுவதற்கான வழி கொள்ளைதான். இன்று சமபலம் படைத்தோர் எதிர்ப்படுகின்றபோது பொருளை ஈட்டுவதற்கான வழியாக வர்த்தகம் பரிணமித்திருக்கிறது.
ஆகவே அன்று கொள்ளைக்கு யுத்தம் தேவைப்பட்டது. இன்று வர்த்தகத்துக்கு பலப்பிரயோகம் தேவைப்படுமிடத்தில் யுத்தம் தேவைப்படுகிறது.
பலம்மிக்க நாடுகளுக்கு வர்த்தகம் தமக்கு சாதகமாக இல்லாவிட்டால் யுத்தத்தில் குதிக்கின்றன. வர்த்தகத்திற்கு படைகளும், பலப்பிரயோகமும் தவிர்க்க முடியாத தேவையாகிறது. இதனை வரலாற்றில் பல இடங்களிலும் காண முடியும்.
அதற்கு ஓர் எடுத்தக்காட்டு சீன வரலாறில் உண்டு. 1842 ஆம் ஆண்டு சீனப் பேரரசு அபின் வர்த்தகத்திற்கு தனது துறைமுகங்களில் தடை விதித்த போது பிரித்தானியக் கடற்படை சீனாவின் மீது போர் தொடுத்து சீனாவை பணியவைத்து சீனா துறைமுகங்களைத் திறந்துவிட்டது.
அபின் யுத்தம்
ஆனால் பிரித்தானியாவில் உள்நாட்டில் அபின் வர்த்தகத்திற்க கடுமையான தடை விதித்திருந்தது. அதுவே வரலாற்றில் அபகீர்த்தி வாய்ந்த "அபின் யுத்தம்" (Opiom War) என அழைக்கப்படுகிறது.
வர்த்தகத்தை சரியாக நடத்துவதற்கு அதிகாரமும் படைகளும் தேவை. ஆகவே உலகளாவிய செல்வங்களை ஈட்டுவதற்கான வர்த்தகத்திற்கு கடலும், கப்பலும், படையும், பலப்பிரயோகமும் தேவையாக உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லையேல் வர்த்தகமும் செய்ய முடியாது. பொருளும் ஈட்ட முடியாது.
எனவே இன்றைய உலகில் கடலும், கப்பலும், படையும் அதன் விளைவான அதிகாரமும் பூமிப்பந்தின் செல்வங்களைக் கொள்ளை இடுவதற்கு தேவையாக உள்ளன.
இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள கொதிநிலை
இதுவே இன்றைய இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள கொதிநிலைக்கு பிரதான காரணமாகும். கடந்த ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் இந்து மாகடலின் கடலாதிக்க சமநிலை பற்றி விளங்கிக் கொள்வதன் ஊடாகத்தான் இன்றைய இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டிருக்கின்ற அதிகாரப் போட்டியை புரிந்து கொள்ள முடியும்.
இந்து சமுத்திரத்தின் முதலாவது கடலாதிக்கம் என்பது தென்னிந்திய சோழப் பேரரசுதான். சோழ மன்னர்களின் கடற்கலங்களான நாவாய்களும் அதில் பயணம் செய்த மறவர் படைகளும்தான் முதலாவதாக இந்து சமுத்திரத்தை தமது கட்டுப்பாட்டுங்கள் கொண்டு வந்தவர்களாவர்.
அவர்களுடைய காலத்தில் அராபிய, பாரசீகளுடைய வர்த்தகர்களும் படைகளும் இந்து சமுத்திரத்தின் மேற்குப் பகுதியான அரபுக் கடலில் பயணம் செய்தார்.
ஆயினும் ஒட்டுமொத்தத்தில் கடல் ஆதிக்கம் சோழர்களின் கையில் இருந்தது. அதுமட்டுமல்லாமல் அரபிய கடலைத் தாண்டி வங்கக் கடலுக்குள் அரபியர்களோ, பாரசீர்களோ பிரவேசிக்க அவர்கள் அனுமதிக்கவேயில்லை.
அன்று சோழர்கள் கடைப்பிடித்த அந்த கடற் கொள்கைதான் ஏறத்தாழ 400 ஆண்டுகள் தென்னிந்தியாவை கடல் வழியாக பாதுகாத்தது என்று சொல்ல வேண்டும். ஆனால் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் சோழப் பேரரசின் வீழ்ச்சியின் பின்னர் அராபியர்கள் வங்கக்கடலில் நுழைந்து ஒரு நூற்றாண்டு செல்வாக்கு செலுத்தியதன் விளைவு இந்தோனேசியா, மலேசியா என்ற இரண்டு பெரும் இஸ்லாமிய நாடுகள் தென்கிழக்காசியாவில் தோற்றுவிக்கப்பட்டுவிட்டன.
இந்தோனேஷியா, மலேசியா என்ற இரண்டு பெரும் இஸ்லாமிய நாடுகள் தோற்றுவதற்கான அடிப்படைக் காரணம் வங்கக்கடலில் இந்திய அரசர்கள் செல்வாக்கு இழந்தமைதான். அதாவது இந்திய அரசுகள் தமது புவிசார் அரசியலை கை நழுவவிட்டமையே.
எனவேதான் வரலாற்றை வரலாற்று நிகழ்வுகளின் விளைவுகளில் இருந்து பார்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. இந்த வரலாற்றுப் போக்கில் நீண்ட நெடிய காலமாக இந்து சமுத்திரத்தில் இந்து சமுத்திரத்தை சாராத அந்நிய நாடுகள் 15ம் நூற்றாண்டுவரை நுழையவில்லை. அதனால் இந்து சமுத்திரம் இந்து சமுத்திர நாடுகளுக்குச் சொந்தமானதாகவே இருந்தது.
இந்து சமுத்திரத்தினுள் நுழைந்த அந்நிய நாட்டுப்படை
ஆனால் முதன் முறையாக இந்து சமுத்திரத்தினுள் நுழைந்த அந்நிய நாட்டுப்படை என்றால் அது சீனாவினது தான். சீனாவின் மிங் வம்சத்து மூன்றாவது பேரரசன் யுங்லோவின் காலத்தில் சீனாவின் கடற்படை தளபதியான அட்மிரல் ஷென் -ஹி (Admiral Zheng- He) 1405ம் ஆண்டு மலாக்கா தொடுகடலைக் கடந்து முதன் முதலில் இந்து சமுத்திரத்தில் பிரவேசித்தார்.
317 கப்பல்களில் 27 ஆயிரம் படை வீரர்களுடன் தென்னிந்தியாவின் கள்ளிக்கோட்டைக்குச் சென்று 1407ல் சீனாவுக்கு திரும்பிச்சென்றார். மீண்டும் அதேயாண்டு 68 கப்பல்களில் 28 ஆயிரம் படை வீரர்களுடன் கள்ளிக்கோட்டைக்கு சென்று திரும்பும் வழியில் 1408 ஆம் ஆண்டு இலங்கையின் காலித் துறைமுகத்திற்கு வந்து திரும்பிச் சென்றார்.
இவ்வாறு ஏழு தடவைகள் 1405 தொடக்கம் 1433 வரையான காலப் பகுதியில் இந்து சமுத்திரத்தில் சீனக் கடல்படை வலம் வந்து ஆபிரிக்காவின் நன்நம்பிக்கை முனைவரைக்கும் தனது கடலாதிக்கத்தை நிலைநாட்டி சென்றது.
1409 ல் கொழும்பு கோட்டை ராஜ்யத்தை கைப்பற்றி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சீன அரசின் கீழ் கோட்டை ராஜ்ஜியம் ஆளப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முதல் முதல் துப்பாக்கியால் சுட்டு துப்பாக்கி பயன்பாட்டை அறிமுகப்படுத்தியவரும் ஷென் -ஹி ஆவார். இதற்குப் பின்னர் 1498 இல் வாஸ்கோடகாமா ஆபிரிக்கக் கண்டத்தை சுற்றி இந்து சமுத்திரத்தில் நுழைந்த முதலாவது ஐரோப்பிய கடலோடியாகவும் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளனாகவும் வரலாறு பதிவு செய்கிறது.
அன்றிலிருந்து இன்றுவரை இந்த சமுத்திரம் ஐரோப்பிய, அமெரிக்க வல்லரசுகளின் மேலாதிக்கத்துக்கு உட்பட்டதாகவும் அந்நிய சக்திகளின் வேட்டைக் காடாகவும் மாறிகிடக்கிறது.
கடல் போக்குவரத்தில் மும்முனைப் போட்டி
இன்றைய உலகின் வர்த்தகத்திற்கு இந்து சமுத்திரம் இன்றியமையாதது. உலகின் கடல் போக்குவரத்து என்பது இந்து, பசுபிக், அத்லாண்டிக் ஆகிய மூன்று சமுத்திர கடல் வழிகளின் ஊடாகவே நிகழ்கிறது. பசிபிக் அத்லாண்டிக் சமுத்திரங்களுக்கு இடைப்பட்டு இணைக்கும் கடலாக இந்து மகா சமுத்திரம் விளங்குவதால் உலகின் கடல் போக்குவரத்தில் இந்து சமுத்திரத்தின் ஊடான கடல்வழி முக்கியமானது.
மேற்கு ஆசியாவில் கிடைக்கின்ற சக்தி வளங்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்வதற்கு இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பும் அவசியமானது. ஆகவே உலகளாவிய வர்த்தகம் தங்கு தடையின்றி நிகழ்வதற்கு இந்து சமுத்திரம் இன்றியமையாதது.
அந்த வகையில் இந்து சமுத்திரத்தை ஒவ்வொரு பேரரசுகளும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு முனைகின்றன. இந்த அதிகாரப் போட்டியின் விளைவுதான் மேற்குலகம், சீனா, இந்தியா ஆகிய மும்முனைப் போட்டி இந்து சமுத்திரத்தில் தோற்றம் பெற்றிருக்கிறது.
இந்த மும்முனைப் போட்டியில் இந்தியாவிற்கே இந்து சமுத்திரம் உரித்தானதும் முதன்மை பாத்திரம் வகிக்க வேண்டியது ஆகும். "இன்னும் நூறு ஆண்டுகளின் பின் இந்த உலகத்தை சீனா ஆளும்" என சீனாவின் தந்தை டாக்டர் சுன்யெட் சென் குறிப்பிட்டார் .
அவருடைய வரிகளை தீர்க்கதரிசனமாக ஏற்று சீனா தொழிற்படுகிறது. சீனர்கள் எப்போதும் ஒரு நீண்டகால திட்டங்களுடனும், இலக்குகளுடனும் செயல்படுவர். அதற்கு உதாரணம் சீனப்பெருஞ்சுவர் கட்டப்படும் போது அது பல நூற்றாண்டுகள் செல்லும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் வடக்கிலிருந்து வரும் படையெடுப்பை தடுப்பதற்கு அவர்கள் ஒரு நீண்ட நெடிய கட்டுமானத்தை தொடங்கினார்கள் கட்டியும் முடித்தார்கள்.
இது அவர்களுடைய பண்பாட்டியலில் வேரூன்றி கிடக்கிறது. அந்த அடிப்படையில் தான், உலகத்தை ஆளும் நோக்கில்தான் அவர்கள் இந்து சமுத்திரத்தை தமது கட்டப்பாட்டுள் கொண்டுவருவதற்கு திட்டமிட்டு செயற்படுகிறார்கள்.
அந்தத் திட்டத்தின் அரைவழியை அவர்கள் இப்போது பூர்த்தி செய்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில்தான் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்னான காலத்தில் இந்திய கொள்கை வகுப்பாளர்களில் பணிக்கர் , கிருஷ்ணமேனன் போன்றவர்களின் பார்வையில் இந்து சமுத்திர பாதுகாப்பை "ஆசியவாத கொள்கை" என்ற அடிப்படையில் முன்னிறுத்தினர்.
இக் கொள்கை ""வாஸ்கோடகாமா யுக எதிர்ப்பு"" என்ற அடித்தளத்தில் இருந்து எழுந்ததாகும். இத்தகைய ஆசியவாத கொள்கையின் அடிப்படையில்தான் எப்போதும் இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு வெளியுறவு கொள்கை கொண்டிருந்தது. இலங்கை ஆட்சியாளர்கள் 1971 இல் இந்தியாவை குளிர்விப்பதற்காக சிறிமாவோ பண்டாரநாயக்க ""இந்து சமுத்திரம் அமைதிப் பிராந்தியம்"" என்ற கொள்கையை முன் வைத்தார்.
எது எப்படி இருப்பினும் இந்தக் கொள்கை சரியானதுதான் ஆனால் அவர்களது நடைமுறை எதிர்வளமாகவே அமைந்தது.
இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவம் பற்றி பணிக்கர் கூறுகையில் ""ஏனைய நாடுகளுக்கு இந்து சமுத்திரம் உலகில் உள்ள முக்கியத்துவமான சமுத்திரங்களில் ஒன்று மட்டுமே. ஆனால் இந்தியாவிற்கு இந்து சமுத்திரம்தான் அதன் உயிர்நாடி.
இந்தியாவின் உயிர்வாழ்வும், சுதந்திரமும் இப்பிராந்திய நீர்ப்பரப்பின் சுதந்திரத்தில் தங்கி உள்ளது. இப்பிராந்தியம் பாதுகாக்கப்படாவிட்டால் இந்தியாவிற்கு தொழில் அபிவிருத்தியும் இல்லை, வர்த்தக வளர்ச்சியும் இல்லை , ஒரு ஸ்திரமான அரசியல் அடித்தளமும் இல்லை"" என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு
ஆனாலும் இத்தகைய உயர்ந்த சிந்தனை கொண்டிருந்த அவர்களால் இந்தியாவினது பாதுகாப்பிற்கான வியூகத்தை இந்து சமுத்திரத்தினது பாதுகாப்பு என்ற அடித்தளத்திலிருந்து கட்டமைப்புச் செய்ய முடியவில்லை என்பதுதான் இன்றைய இந்து சமுத்திர கொதிநிலைக்கு காரணமாக அமைந்துவிட்டது.
இந்து சமுத்திரத்தை அமைதிப் பிராந்தியமாக பிரகடனப்படுத்தவும், மாற்றவும் இந்தியா தொடர்ந்து தவறிவிட்டது. அதன் விளைவுகளால் இன்று ஐரோப்பியரினதும், அமெரிக்கர்களினதும், சீனர்களினதும் உள்நுழைவும், இராணுவ பலப்பரீட்சையும் உருப்பெற்றுவிட்டது.
இந்து சமுத்திரத்தின் கேந்திரத் தன்மையும் இந்தியாவின் புவிசார் அரசியலும் செல்வாக்கு இழந்தமையின் விளைவுதான் பாகிஸ்தானின் கூவாதர் துறைமுகமும், இலங்கையின் அம்பாந்தோட்டத் துறைமுகமும், மியார்மாவின் கோகோ தீவும், கெனியாவின் லாமோ துறைமுகமும் சீனாவின் செல்வாக்குக்கு உட்பட்டு விட்டன.
சீனா மேற்குலகத்தினதும் இந்தியாவினதும் அதிகாரத்தை தாண்டி இந்து மகா சமுத்திரத்தில் இன்று நிலை பெற்றிருக்கிறது. இந்தப் பின்னணியில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் பாரதூரமானவை. இதனை கருத்தில் கொண்டு இன்றைய நிலையிலிருந்து இன்னும் சில பத்தாண்டுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கணித்து செயற்பட வேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
சீனா இந்து சமுத்திரத்தினுள் 590 ஆண்டுகளுக்கு முன்னர் தனது இழந்த செல்வாக்கை மீண்டும் நிலை நாட்டுவதற்காகவே யுவான் வாங்-5 என்ற உளவு கப்பல் இந்து சமுத்திரத்தில் பிரவேசித்திருக்கிறது.
செயற்கைக்கோள் தொடர்புகளால் இலத்திரன்கள் கருவிகளின் ஊடான ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய இந்த கப்பல் ஆகஸ்ட் 16 இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தொட்டு நிற்கிறது.
சீன அரசு ஏற்கனவே அறிவித்திருந்த அவர்களுடைய திட்டமிட்ட பயணம் எந்த தங்கு தடை இன்றி நிகழ்ந்தேறியுள்ளது. ஒரு வாரம் அம்பாந்தோட்டையில் தரித்திருந்து சீனர்கள் தங்களுக்கான நிகழ்நிரலின்படி காரியங்களை ஆற்றித் திரும்புவர் என்பதுதான் உண்மையாகும்.
ஆனால் இந்தப் பயணம் என்பது இந்தியாவிற்கு இன்னொரு வகையான செய்தியைச் சொல்கிறது. இந்த சமுத்திரம் இந்தியாவிற்கோ அல்லது மேற்குலகுக்கோ மட்டும் சொந்தமானது அல்ல.
அது இந்த உலகில் அனைவருக்கும் சொந்தமானது என்றும், தனக்கும் இந்து சமுத்திரத்தில் பங்கு உண்டு என்பதையும் சீனா தனது இக் கப்பற்படைப் படைப்பிரவேசத்தின் மூலம் கூறுகிறது. பாகிஸ்தானின் குவாதருக்கும், மியார்மாவின் கோகோ தீவுகளுக்கு சீனா தரைவழி ஊடாக தொடர்பை பேண முடியும். ஆனால் அம்பாந்தோட்டைக்கு அவ்வாறு தொடர்பை பேண முடியாது. எனவேதான் சீனா தனது கப்பலை அனுப்பியுள்ளது.
அம்பாந்தோட்டை இந்தியாவை ஒட்டினாற் போல் இருக்கின்றதோடு மட்டுமல்லாமல் அம்பாந்தோட்டையில் இருந்து கொண்டு சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்னிந்தியா முழுவதையும் உளவு பார்ப்பது இன்றைய இலத்திரன்கள் யுகத்தில் மிக இலகுவான காரியம்.
இந்தியாவின் கால் மாட்டில் இருக்கின்ற அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 வருட குத்தகைக்கு எடுத்ததன் மூலம் மூன்று வழிகளாலும் இந்தியா முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை. இந்த சீனக் கப்பலின் பயணத்தை இந்தியாவினால் எந்த வகையிலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
சீன அரசிடம் மன்றாடி கேட்க வேண்டிய நிலைக்கு இந்திய அரசை நெருக்கடிக்குள் இந்த பயணம் தள்ளியிருக்கிறது. இதனால் இலங்கை அரசின் மீது இந்தியாவுக்கு சின மேற்பட்டாலும் இலங்கை அரசு அதனைப் பொருட்படுத்தாது தனது இராஜதந்திர மீசையை ஒருகணம் முறுக்கக்கூடும். இந்தியாவுடைய சுதந்திரதின கொண்டாட்டம் ஆகஸ்ட் 15ம் திகதி நடைபெற்று இருக்கிறது.
சீனக் கப்பல் இந்தியாவின் பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைந்து நிற்பது என்பது இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. எனவே இந்தியாவின் தென்கோடியில் இந்தியாவின் இறைமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதான இலங்கை தீவின் இச்செயல் பற்றி இந்தியா மிகவும் கவலைகொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
