சீனாவிற்கும் ஏற்படுமா பொருளாதார நெருக்கடி?
கடந்த சில நாட்களாக மின் பற்றாக்குறையால் சீனாவின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மின்பற்றாக்குறையால் ஒட்டுமொத்த மாகாணங்களும் முடங்கிப்போவதைத் தவிர்க்க, ஆகஸ்ட் மாத மத்தியில் இருந்து சீனாவின் 16 மாகாணங்களில் சுழற்சி முறையில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
லியோனிங் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக ஏற்பட்டுள்ள மின் தடையால் தெரு விளக்குகள் மற்றும் சிக்னல் விளக்குகள் நெடுஞ்சாலையில் திடீரென எரியாமையினால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
நிலக்கரி பற்றாக்குறை மற்றும் காற்று மாசைக் குறைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்பட்டுள்ளது.
சீன நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இந்த மின் தடை உருவெடுத்துள்ளமையினால், செல்ஃபோன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளதுடன்,மின்சாரமின்றி பல்வேறு தொழிற்சாலைகள் தமது உற்பத்திகளை நிறுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த நிலை நீடிக்கலாம் என்பதால் அதுவரை முறை வைத்து வழங்கப்படும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு, மக்களை மாகாண நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
இதற்கமைய அலுவலகங்களில் மூன்று மாடிகள் வரை லிஃப்ட்களை பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெரும்பாலும் இயற்கையான ஒளியை பயன்படுத்துமாறும், குறைந்த அளவில் குளிர்சாதன வசதியை உபயோகிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த மின்தடை சீனாவின் பொருளாதாரத்தை இருளில் தள்ளிவிடும் என பொருளாதார வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளதுடன்,சீனாவில் ஏற்பட்டுள்ள மின் தடை உலகச்சந்தையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.