கடன் சலுகை காலத்தை வழங்க இணங்கிய சீன எக்சிம் வங்கி
தனி நிறுவனமாக இலங்கையின் பிரதான கடன் உரிமையாளரான சீனாவின் எக்சிம் வங்கி, இலங்கைக்கு இரண்டு ஆண்டு கடன் சலுகை காலத்தை வழங்க இணங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் எக்சிம் வங்கி இந்த இணக்கத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு 4 பில்லியன் டொலர்களுக்கும் மேல் கடன் வழங்கியுள்ள எக்சிம் வங்கி
அத்துடன் சர்வதேச நாண நிதியத்தின் கடன் மறுசீரமைப்புக்கு தமது ஒத்துழைப்பு வழங்கப்படும் என எக்சிம் வங்கியின் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள இந்த கடிதத்தில் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் நிலைப்பாாடு குறித்து இன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் மூலம் அறிவிக்கவிருந்த நிலையில் எக்சிம் வங்கி இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.
இலங்கை பிரதான கடன் உரிமையாளரான சீனா 7.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளது. இதில் 4 பில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட கடனை சீனாவின் எக்சிம் வங்கியே வழங்கியுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைக்க சீனா உதவும் என நம்பிக்கை
சீனா வழங்கியுள்ள ஏனைய கடன் தொகையை மறுசீரமைத்து சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்னு உதவும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு சம்பந்தமான தனது நிலைப்பாட்டை இந்தியா கடந்த 16 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் மூலம் அறிவித்தது.
சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு கடன்களை வழங்கிய இரண்டு பிரதான நாடுகள் என்பதுடன் இந்நாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைத்த பின்னர் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் கடன் வசதிகள் தொடர்பான தனது இணக்கத்தை வெளியிட உள்ளது.