சிறுவர் முறைப்பாடுகளுக்கு பொலிஸார் தலையிட முடியாது:சட்டத்தில் திருத்தம்!
சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் போது பொலிஸாரின் தலையீடின்றி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சுயாதீனமாகச் செயற்படக்கூடிய வகையில் சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'சிறுவர் பாதுகாப்பு'
அத்துடன் அந்த அதிகாரசபையின் அதிகாரங்களை அதிகரித்து அது சுயாதீனமாக முடிவுகளை எடுக்கக்கூடிய வகையில் புதியதொரு சட்டமூலத்தைக் கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் நம்பகமாக தெரியவந்துள்ளது.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொடர்பிலான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ள அதேவேளை அதன் சட்டப்பூர்வமான பணிகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையே பொறுப்பேற்றுள்ளது.
எனினும் அந்த அதிகாரசபைக்குக் கிடைக்கும் முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் இயக்குநரிடமிருந்து அதிகாரசபை எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற வேண்டியுள்ளது.
சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள்
குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 125ஆம் பிரிவின்படி இவ்வாறு பொலிஸ் மா அதிபர் ஊடாக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கும் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும் அவசியமான பிரிவைத் திருத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதிகாரசபையின் தலைவரின் உத்தரவுக்கமைய செயற்படக்கூடிய வகையிலான புதியதொரு சட்டமூலத்தைக் கொண்டு வருவதுடன் சிறுவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸாரின் ஆதிக்கத்திற்கு உட்படாத (சுயாதீனமான) பொலிஸ் பிரிவு ஒன்றை அதிகாரசபைக்குள் நிறுவுவதற்குரிய சட்ட வரைபுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் தற்போதும் ஒரு பொலிஸ் பிரிவு இயங்கி வருகின்ற போதிலும் அது பொலிஸ் மா அதிபரின் நேரடி உத்தரவுகளுக்கு இணங்கவே செயற்படுகின்றது.
இதன் காரணமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் விசாரணைகளை அதன் தலைவரின் அதிகாரப் பலத்தின் கீழ் மேற்கொள்வதற்குரிய திருத்தங்களைக் கொண்டு வருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.