கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்த குழந்தை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தையின் சிறுநீரகம் அகற்றப்பட்டு மரணித்தமை தொடர்பான வழக்கு மீண்டும் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று(11.02.2025) குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறியவரும், தற்போது வெளிநாட்டில் வசிப்பவருமான வைத்தியர் நவீன் விஜேகோனின் வாக்குமூலமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் பிறகு, குழந்தையின் மரணம் தொடர்பான தீர்ப்பை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 2023 ஆம் ஆண்டு சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின் மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியது.
இதற்கு வைத்தியர்களின் அலட்சியமே காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் கிருமி தொற்று காரணமாக கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதும் 03 மாதங்கள் வயதுடைய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சிறுநீரகம் தொடர்பான நோய்
குழந்தைக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் நிலைமை இருப்பதாக வைத்தியர்கள் கண்டறிந்ததாகவும், வலது சிறுநீரகம் ஆரோக்கியமாக உள்ள நிலையில் இடது சிறுநீரகத்தை அகற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அறுவை சிகிச்சையின் போது ஆரோக்கியமான வலது சிறுநீரகமும் அகற்றப்பட்டதாக வைத்தியர்கள் பின்னர் அறிவித்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சிறுநீரகங்களும் இல்லாததால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வரை டயாலிசிஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட குழந்தை கிருமி தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)