சிறுவர் நேய நகராக மாற்றப்பட்டுள்ள மட்டக்களப்பு மாநகரசபை - மாநகர முதல்வர் தி.சரவணபவன்
குற்றவாளியாகச் சந்தேகிக்கப்பட்டு பிணையில் வந்த ஒருவர் அதே நிறுவனத்தில் பணியாற்ற முடியாது என அரச தாபனக்கோவையில் தெளிவாகக் கூறியுள்ள நிலையில் ஒரு வாரமாகியும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் பிரதம செயலாளரினால் எடுக்கப்படாத நிலையில், அது தொடர்பில் அவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவிலேயே இலங்கையின் மட்டக்களப்பு மாநகரசபை சிறுவர் நேய நகராக முதன்முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
நேற்று சர்வதேச சிறுவர் தினம் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை மாநகர முதல்வர் ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுதந்திரமான வாழ்வியல் முறைகள் என்பவற்றினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரமானது சிறுவர் சினேகபூர்வ மாநகரமாக மாற்றியமைக்கப்பட்டது.
பல வளர்முக நாடுகளில் மேற்படி சிறுவர் சினேக பூர்வ மாநகரங்கள் அமையப்பெற்றிருந்தாலும், இலங்கையில் முதல் முறையாகவும் ஏனைய மாநகரசபைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் இத் திட்டம் அமையப் பெற்றது.
அத்துடன் மாநகருக்குள் வாழும் சிறுவர்களின் திறன் விருத்தி சிறுவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதன் ஊடாக அவர்களை எதிர்காலத்தில் சமூகப் பொறுப்பு மிக்க நற்பிரஜைகளாக வளர்த்தெடுத்தல் மற்றும் மாநகருக்குள் வதியும் பெற்றோர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படும் நெருக்கத்தினை வெகுவாக அதிகரிப்பதன் மூலம் பெற்றோர் அதிக நேரத்தினை தமது பிள்ளைகளுடன் போக்குவதற்கான செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்றனவற்றிற்காக முதற்படியாக மாநகர பாலர் பாடசாலைகள், சிறுவர் பூங்காக்கள் போன்றவற்றினை மாற்றியமைப்பதற்கான திட்டங்களும் இதன்மூலம் செயற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் கோவிட் - 19 சூழ்நிலைகளுக்குள்ளும் பல்வேறு செயற்திட்டங்கள், அழகுபடுத்தும் செயற்பாடுகள் போன்றன மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
இச் செயற்பாடுகள் மட்டக்களப்பு மாநகரசபை, கல்வி, சுகாதாரத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நகர மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த சுமார் 281 முக்கிய அதிகாரிகளைச் சென்றடைந்துள்ளமை விசேட அம்சமாகும்.
இத்திட்டத்தின் கீழ் பிள்ளைகளின் வளர்ச்சி தொடர்பான சமூக சேவைகள் உட்கட்டமைப்பு செயற்பாட்டில் 35 உட்கட்டமைப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மருத்துவ சிகிச்சையகங்கள் தாய்ப்பாலூட்டும் வசதிகளோடும், விளையாட்டுப் பகுதி, விளையாட்டுப் பொருட்பெட்டி மற்றும் தாய் பிள்ளைகளுக்கு விழிப்பூட்டும் செய்திகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளன.
யுனிசெப் நிறுவனத்தின் நிதி மற்றும் செரி நிறுவனத்தின் பாரிய ஒத்துழைப்புகள் இல்லாமல் மேற்படி செயற்திட்டங்கள் சாத்தியமாவது கடினமாகவே இருந்திருக்கும்.
அதே போன்று மட்டக்களப்பு மாநகரசபை, அரச துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகம் போன்றனவற்றின் ஒத்துழைப்பினாலும் இம் முன்னேற்றகரமான செயற்பாடு செயற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாநகரசபையின் நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்பட்ட பின்பு அனைத்து வேலைகளிலும் ஒரு தளம்பல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எங்களுடைய செயற்பாடுகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நாங்கள் 2018ஆம் ஆண்டில் 80,90 வேலைகளைச் செய்தோம். 2019ஆம் ஆண்டில் 215இற்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்தோம்.
2020ஆம் ஆண்டிலே கோவிட் தொற்று இருந்தாலும் வெளி நிதிகள் மூலமாக 117 வேலைகளையும் 17 வாய்க்கால்களும் எங்களால் செய்யப்பட்டது.
இதற்கு மேலதிகமாக மாநகரசபை நிதி மூலம் செய்வதற்காக எங்களால் முன்மொழியப்பட்டு அனுமதிக்கப்பட்ட வேலைகளை டிசம்பர் மாதம் செய்வதற்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம்.
எனினும் டிசம்பர் இந்த மாற்றம் ஏற்பட்டதால் அந்த வேலைகளில் தாமதம் ஏற்பட்டது. வேறு வேலைகளில் எங்களுடைய உத்தியோகத்தர்களைப் பயன்படுத்தியதன் காரணத்தினால் எங்களுக்கு 2020ஆம் ஆண்டு வேலைகூட இன்னும் முடியவில்லை.
2021ஆம் ஆண்டு பத்தாம் மாதம் தொடங்கிவிட்டது. ஆனால் 2020ஆம் ஆண்டிற்குரிய 17 வேலைகள் இன்னும் முடிக்கப்படவில்லை.
2021ஆம் ஆண்டிற்கான வேலைகள் இன்னும் தொடங்கவில்லை. அதற்கான மாற்றுத் திட்டங்களை நாங்கள் அங்கீகரித்து அனுமதி வழங்கியிருக்கின்றோம். ஆனால் இன்னும் அது தொடங்கவில்லை.
அந்த நிலையில் தகனசாலை அவசியமாக இருந்தது. நாங்கள் ஏற்கனவே அதனை கட்டடங்கள் திணைக்களத்திற்கு வழங்கி செய்து முடிக்கலாம் என்று தீர்மானித்திருந்தோம்.
ஆனால் அவர்களை இங்கு நிர்வாகத்திலிருந்தவர் அச்சுறுத்தியதன் காரணமாக அவர்கள் தங்களால் இதனை செய்ய முடியாதென எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றார்கள்.
எனினும் அவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடியதன் பேரில் பிரதம செயலாளரின் அனுமதி இருந்தால் அதனை செய்து முடிக்கலாம் என கூறியதன் பேரில் பிரதம செயலாளரையும் கட்டடங்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளரையும் சந்தித்து இந்த விடயங்களை முன்கொண்டு செல்வதற்கு நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது இறுதித் தருணத்தில் அவருக்கும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் வழங்கியதன் காரணமாக அவரும் தங்களால் இதனை செய்ய முடியாதெனவும் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்ட பின்பு தான் இதனை செய்ய முடியுமெனவும் எனக்கு கடிதம் மூலம் அறியத் தந்திருந்தார்.
இந்த நிலையில் தான் மாநகரசபையானது நேரடியாக விண்ணப்பத்தைக் கோருவதற்காகப் பிரேரணையைக் கொண்டுவந்து நிதிக்கூறின் அனுமதியோடு விண்ணப்பத்தைக் கோரியிருந்தோம். நேற்றையதினம் 30ஆம் திகதியுடன் அதன் இறுதிநாளாகும்.
இந்த விண்ணப்பம் கோரப்பட்ட பின்பு எங்கள் நிர்வாகத்திற்குப் பொறுப்பானவர் இதற்கு நீங்கள் ஆதரவு வழங்கக்கூடாதென எங்களுடைய உத்தியோகத்தர்களுக்கு இறுக்கமான கடிதமொன்றைப் போட்டிருந்தார்.
பின்பு உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டதன் பேரில் அவர் இதனை கட்டாயம் செய்து முடிக்க வேண்டுமெனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின்பு எங்கள் உத்தியோகஸ்தர்கள் அதனைச் செய்வதாக ஒத்துக்கொண்டு ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கும் நிலையில் மூன்று ஒப்பந்தக்காரர்கள் எங்கள் உத்தியோகத்தர்களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைக் கோருவதற்கு முயற்சித்தபோது அதனைக் கொடுப்பது நிர்வாகத்திற்குப் பொறுப்பானவரால் தடுக்கப்பட்டிருக்கின்றது.
இறுதி நேரத்தில் அவர்கள் என்னுடன் தொலைபேசியில் கதைத்ததன் பேரில் நான் நேரடியாக இங்கு வந்து உத்தியோகத்தர்களை அழைத்து அந்த விண்ணப்பத்தை வழங்கியிருந்தேன்.
கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் காரணமாக விண்ணப்ப முடிவுத் திகதியை மேலும் பத்து நாட்கள் நீடிப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.
அது சம்பந்தமாக நான் இன்று எமது பிரதி ஆணையாளருக்குக் கடிதம் அனுப்பி கொள்முதல் குழுவைக் கூட்டி பத்து நாட்கள் நீடிப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற ஒரு விடயத்தைச் செய்து முடிக்க விடாது தடுக்கின்ற விடயமாகவே இதனை நான் கருதுகின்றேன்.
ஏற்கனவே சட்டங்கள் மீறப்பட்டதன் பேரில் எங்களால் வழக்குத் தொடுக்கப்பட்டு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதனையும் மீறி சில செயற்பாடுகள் செய்யப்பட்டதன் காரணத்தினால் நாங்கள் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடுத்திருக்கின்றோம்.
அந்த வழக்கில் அவர் சந்தேக நபராக கருதப்பட்டு பத்து இலட்சம் ரூபா பிணையில் அவர் வெளியில் வந்திருக்கின்றார்.
பிணையில் வெளிவந்த நிலையிலும் அவர் செய்கின்ற செயற்பாடுகள் சட்டவிரோதமாகவே இருக்கின்றன என நான் நினைக்கின்றேன்.
இது சம்பந்தமாக பிரதம செயலாளருக்கு நான் கடிதம் அனுப்பியிருக்கின்றேன். அரச ஸ்தாபன விதிக்கோவையில் குறிப்பிடப்பட்டிருப்பதன் அடிப்படையில் குற்றவாளியாகச் சந்தேகிக்கப்பட்டு பிணையில் வெளிவந்த ஒரு நபர் அதே நிறுவனத்தில் பணியாற்ற முடியாது.
ஒருவார காலம் ஆகியும் பிரதம செயலாளரால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அரச ஸ்தாபன விதிக்கோவையில் குறிப்பிடப்பட்டிருப்பதன் அடிப்படையில் இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பணித்து இன்று நான் பிரதம செயலாளருக்கும், உள்ளூராட்சி ஆணையாளருக்கும் ஒரு தொலைநகலை அனுப்பியிருக்கின்றேன்.
மிகவிரைவில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களென நான் கருதுகின்றேன் எனத்தெரிவித்துள்ளார்.