கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ய முடிவு? மோடியிடம் வைத்த நிபந்தனை
உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2018 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஓர் ஆண்டிலேயே அதாவது 2019-ம் ஆண்டே கவிழ்ந்தது. இதற்காகவே காத்து கொண்டிருந்த பாஜக ஆட்சியை பிடித்தது.
எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி
பாஜகவின் எடியூரப்பா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். பாஜக ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் கர்நாடகா பாஜகவில் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்துள்ளது.
சீனியர் அமைச்சர்கள் மீது எடியூரப்பா மேற்கொண்ட சில நடவடிக்கைகள் அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. இது போதாதென்று எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஆட்சி நிர்வாகத்தில் அடிக்கடி தலையிட்டதால் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மனம் விட்டு பேசினார்
ஒரு சில சீனியர்கள் பாஜக தலைமைக்கும் எடியூரப்பா செயல்பாடு மீது புகார் அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் மேகதாது விவகாரமும் விஸ்வரூபமெடுக்க இதுதான் சந்தர்ப்பம் என்று டெல்லி விரைந்து வந்தார் எடியூரப்பா. மேகதாது அணை விவகாரத்தை பிரதமர் காதில் போட்டு வைத்த எடியூரப்பா, கர்நாடகாவில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மனம் விட்டு பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜினாமா செய்ய முடிவு?
நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த எடியூரப்பா, உடல்நலக்குறைவு காரணமாக ராஜினாமா செய்ய முன்வந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆனால் தனது மகன் விஜயேந்திராவுக்கு மாநில கட்சி பிரிவில் நல்ல பதவி கிடைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் எடியூரப்பா ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமித்ஷா, நட்டாவுடன் சந்திப்பு
பிரதமரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் எடியூரப்பா சந்தித்து பேசியுள்ளார். ''நீங்கள் கர்நாடகாவில் கட்சிக்காக அதிகம் பணியாற்ற வேண்டும்.
ஆசீர்வாதம் உங்களுடன் உள்ளது. உ.பி.யைப் போலவே நாம் 2023 சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் அனைத்து இடங்களையும் வெல்ல வேண்டும்' என்று அமித்ஷா தன்னிடம் தெரிவித்ததாகவும், சட்டசபை தேர்தல் குறித்துதான் அதிகம் விவாதித்ததாகவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
அடுத்த முதல்வர் யார்?
எடியூரப்பாவை மாற்றுவதற்கு பாஜக முடிவு செய்தால், ஜூலை 26-ம் தேதிக்குள் தலைமை மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சுரங்கத்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி ஆகியோரில் ஒருவர் முதல்வராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.