டயானாவின் கோரிக்கைக்கு பதில் வழங்கிய தலைமை நீதிபதி
ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சமர்ப்பித்த மனுவை விசாரிப்பதற்கு முழு பீடத்தை நியமிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை தொடர்பில் எதிர்காலத்தில் பொருத்தமான தீர்மானம் வழங்கப்படும் என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
குறித்த உத்தரவை நேற்று(15.11.2023) அவர் திறந்த நீதிமன்றில் வழங்கியுள்ளார்.
உச்ச நீதிமன்ற அமர்வு
டயானா கமகேவின் மனுவை முழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்குமாறு கோரி அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி உதித இஹலஹேவா முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பிரதம நீதியரசர் குறித்த உத்தரவை அறிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜனக் டி சில்வா மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்தக் கோரிக்கை நேற்று பரிசீலிக்கப்பட்டது.
டயானா கமகே சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி உதித இஹலஹேவா, அரசியல் கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்படுவது தொடர்பில் உச்ச நீதிமன்றம் அண்மையில் பல தீர்மானங்களை அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் பிரதிவாதிகள் தமது கட்சிக்காரரை பணிநீக்கம் செய்வதற்கு முன் நியாயமான ஒழுக்காற்று விசாரணையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எனவே இதனை பொது முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக கருதி உரிய மனுவை முழுமையான குழுவின் முன் பரிசீலிக்க உத்தரவிடுமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |