வடக்கு - கிழக்குப் போர்ச்சூழல் கவனிக்கப்படாதது ஏன்..! நீதிமன்றில் எழுப்பப்பட்ட கேள்வி
செம்மணிப் புதைகுழி தொடர்பான இடைக்காலத் தடயவியல் அறிக்கையில், வடக்கு - கிழக்கில் நிலவிய போர்ச்சூழல் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
செம்மணிப் புதைகுழி தொடர்பான அறிக்கையில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய போர்ச் சூழல்கள் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டுச் சூழல்கள் தொடர்பில் கவனமாக ஆராயப்பட்டிருக்க வேண்டும்.
உயிரிழந்தவர்களின் மீதான அவமதிப்பு
தொற்றுநோய் அல்லது வேறு குற்றமற்ற நிகழ்வின் அடிப்படையில் விளக்கம் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், இந்த வரலாற்றுச் சூழ்நிலைகளை பேராசிரியர் ராஜ் சோமதேவ போதுமான அளவுக்கு ஆராயவில்லை என்பதே உண்மை.

ஆயுத மோதல் இடம்பெற்றிருந்தது என்பதனால் மட்டும், எந்தவொரு தனிநபரின் மரணத்திற்கான காரணம், திகதி அல்லது சூழ்நிலைகள் நிரூபிக்கப்படுவதில்லை.
இருப்பினும், தொடர்புடைய வரலாற்றுப் பதிவுகள், அக்காலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகள், காணாமல் போனோர் பற்றிய தகவல்கள், சாட்சியாளர் வாக்குமூலங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய ஏனைய சான்றுகள் ஆகியவை தொல்லியல் மற்றும் தடயவியல் கண்டுபிடிப்புகளுடன் இணைத்து, பக்கச்சார்பின்றி ஆராயப்பட வேண்டும்.
மாறாக, கிடைக்கப்பெற்ற சான்றுகள் விரிவாகவும் பாரபட்சமின்றியும் மதிப்பீடு செய்யப்படாமல், ஒரு வரலாற்று அல்லது அறிவியல் கருதுகோளை ஏற்று ஏனைய நியாயமான சாத்தியக்கூறுகளை நிராகரிக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.