செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி..!
செம்மணி மனிதப்புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றைய தினம்(1) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கழுத்தில் காசு வடிவிலான தாயத்துடன் என்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில் அது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான நிலையில், மே மதம் 09ஆம் திகதி சனிக்கிழமை வரையில் 12 நாட்கள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றன.
அகழ்வு பணிகள்
அந்நிலையில், 09ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நேற்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் போது கழுத்து பகுதியில் காசு வடிவிலான தாயத்துடன் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில் அது முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை புதைகுழி பகுதிக்குள் செத்தல் தேங்காய் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் சில என்பு கூடுகள் இனம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுத்தம் செய்து அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையால், அவற்றை அடையாளப்படுத்தவில்லை.
செம்மணி மனிதப் புதைகுழி
இந்தநிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 13 நாட்களில் 22 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், புதைகுழிக்குள் இருந்து மூக்குத்தி , நாணய குற்றிகள் , ஆணிகள், மஞ்சள் நிற வளையல் துண்டு உள்ளடங்கலாக 17 பிற பொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் காசு வடிவிலான தாயத்து மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை செம்மணி புதைகுழிக்குள் இருந்து இதுவரையிலான கால பகுதியில் 262 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.