60 வருடங்களுக்கு மேல் கவனிப்பாரற்று கிடந்த குளம்! சாவகச்சேரி நகரசபை அதிரடி நடவடிக்கை
சுமார் 60 வருடங்களுக்கு மேல் கவனிப்பாரற்று இருந்த நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று(15) மீசாலை கிழக்கு வட்டாரத்தில் நகராட்சி மன்றத்தின் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.
நகரசபை அதிரடி
இதன்போது சுமார் 60 வருடங்களுக்கு மேலாக தூர்வாரப்படாமல் நகரசபையின் கண்காணிப்பில் இருந்து விடுபட்ட பழமைவாய்ந்த குஞ்சர்துரவு குளம் உபதவிசாளர் மற்றும், உறுப்பினர்களின் கண்காணிப்பின் கீழ் அதிரடியாக ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது.

கிராமத்தின் அடையாளமான குஞ்சர்துரவு குளத்தினை தூர்வாரி பாதுகாக்குமாறு கிராம மக்கள் நீண்டகாலமாக நகரசபையிடம் கோரிக்கை முன்வைத்தும் பயனற்ற நிலையில் வட்டார உறுப்பினர் பிரகாஷ் உபதவிசாளர் கிஷோரோடு இணைந்து முன்னெடுத்த முயற்சியின் பயனாக குஞ்சர்துரவு குளம் தூர்வாரப்பட்டுள்ளது.
நகரசபையின் கடந்த மாதாந்த அமர்வில் உபதவிசாளரினால் முன்மொழியப்பட்ட மரபுரிமைச் சின்னங்கள், கிணறுகள், கேணிகள், குளங்கள் என்பவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற ஏகமனதான பிரேரணைக்கு அமையவே உள்ளூராட்சி வாரத்தின் முதன்நாளில் குஞ்சர்துரவு குளம் தூர்வாரும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குளம் தூர்வாரும் பணியினை நகரசபை தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஷ், உபதவிசாளர் ஞா.கிஷோர், செயலாளர் எஸ்.நிசான் ஆகியோர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.



