அடுத்தடுத்து பறிபோகும் சரித்தின் முக்கிய பதவிகள்.. பதவிநீக்கம் குறித்து வெளியான தகவல்கள்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவியை உடனடியாக இடைநீக்கம் செய்ய, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்தும் பகுஜன சக்தி என்ற அரசியல் அமைப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2023ஆம் ஆண்டில் நடந்ததாகக் கூறப்படும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக, 25ஆம் திகதி அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த அரசியல் கட்சிகள் இந்த முடிவுகளை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு ஊடக அறிக்கையில், சரித் அபேசிங்க கட்சியின் ஹொரணை தேர்தல் அமைப்பாளராகப் பணியாற்றியதாகவும், தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது கட்சி உறுப்பினர் பதவியையும் அவர் வகித்த அனைத்துப் பதவிகளையும் உடனடியாக இடைநீக்கம் செய்ய கட்சி முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதிக் குற்றச்சாட்டுக்கள்..
இருப்பினும், சம்பவம் நடந்த 2023ஆம் ஆண்டில், சரித் அபேசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவோ அல்லது அமைப்பாளராகவோ இருக்கவில்லை என்றும், அந்தக் காலகட்டத்தில் அவர் கட்சியில் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஊழல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கட்சி ஒருபோதும் ஆதரிக்காது என்றும், சட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு அது அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூறியுள்ளது.
இதற்கிடையில், சரித் அபேசிங்க மீது எழுப்பப்பட்டுள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுக்கள், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் அதிகாரப்பூர்வ விசாரணைகள் மற்றும் கைதுகளைக் கருத்தில் கொண்டு, அவரை பகுஜன சக்தி கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்தும், அதன் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும் உடனடியாக நீக்குவதற்கு அமைப்பின் செயற்குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

கட்சியின் நற்பெயர், நம்பகத்தன்மை மற்றும் மக்கள் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக இந்த நிர்வாக முடிவு எடுக்கப்பட்டதாக பகுஜன சக்தியின் பொதுச் செயலாளர் இரங்கா மெண்டிஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே எடுக்கப்பட்ட முன்முடிவு அல்ல என்றும், எதிர்கால சட்ட முன்னேற்றங்களையும் நீதிமன்றத் தீர்ப்பையும் கருத்தில் கொண்டு நிர்வாகக் குழு மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.