ரஷ்யா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு! மறுப்பு தெரிவிக்கும் ஜோ பைடன்
உக்ரைன் எல்லையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான போலந்தின் ஒரு கிராமத்தில் நேற்று முன்தினம் ஒரு ஏவுகணை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஏவுகணை ரஷ்யாவின் தயாரிப்பு என போலந்து வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவின் தயாரிப்பு
இதேவேளை இந்த விடயம் குறித்து நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்குமாறு தலைநகர் வார்சாவில் உள்ள ரஷ்ய தூதருக்கு மனு அனுப்பியுள்ளது.
ஆனால், இந்த ஏவுகணை தாக்குதலில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்தோனேசியா வின் பாலி தீவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக தலைவர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நேற்று நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் நேட்டோ உறுப்பு நாடுகள் மற்றும் ஜப்பான் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
தலைவர்களின் கருத்துக்கள்
கூட்டத்துக்குப் பிறகு ஜோ பைடன் கருத்து கூறும்போது,“அந்த ஏவுகணை ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டது இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது”என கூறியுள்ளார்.
இது தொடர்பில் போலந்து அதிபர் அன்ட்செஜ் துடா கூறும்போது,“அந்த ஏவுகணை ரஷ்ய தயாரிப்பாக இருக்கலாம் என கருதுகிறோம்”என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்யாவின் ஏவுகணையை தகர்ப்பதற்காக உக்ரைன் ராணுவம் ஏவிய ஏவுகணை தவறுதலாக போலந்தில் விழுந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறும்போது,“போலந்தில் விழுந்தது உக்ரைன் ஏவுகணையாக இருக்கலாம்”என கூறியுள்ளார்.