அடுத்த சில மணி நேரங்களில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெறும் முரசு! வானிலை மாற்றம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த "முரசு" (Murasu) சூறாவளியான தீவிர சூறாவளி புயலாக வலுப்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த "முரசு" (Murasu) சூறாவளியானது, நேற்றிரவு (1) 11.30 அளவில் காங்கேசன்துறைக்கு வட-வடகிழக்கே சுமார் 480 கிலோமீற்றர் தொலைவில் (வடக்கு நெட்டாங்கு 13.3°N மற்றும் கிழக்கு அகலாங்கு 83.0°E) மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில மணி நேரங்களில் தீவிர சூறாவளி
அதன்படி, சூறாவளியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (2) அடுத்த சில மணி நேரங்களில் தீவிர சூறாவளிப் புயலாக (Severe Cyclonic Storm) மேலும் வலுப்பெறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவுக்கும் நாளை (3) அதிகாலைக்கும் இடைப்பட்ட காலத்தில் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியான நெல்லூருக்கும் நர்சாபூருக்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
எனவே 10N-17N மற்றும் 80E-90E ஆகிய எல்லைக்குட்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வரும் வரை மீனவர்களும் கடற்படையினரும் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
ஏற்கனவே அப்பகுதிகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை
இலங்கையின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று (2) பிற்பகல் ஒரு மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த முன்னறிவிப்புகளைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென்மேற்கு அல்லது தெற்கு திசையிலிருந்து மணிக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணிக்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தல்
இருப்பினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்பதுடன், கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகவும் மாறக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri