முச்சக்கர வண்டி கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
எரிபொருள் விலை திருத்தம்
நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.
இதற்கமைய, முதலாவது கிலோ மீற்றருக்கு 110 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து 90 ரூபாயும் அடங்கிய பழைய கட்டணத்தையே தொடர்ந்தும் அறவிடப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
பால் மா மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக்கொண்டு, எரிபொருள் விலையை 15 ரூபாவால் குறைப்பது அரசாங்கத்தின் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், முச்சக்கர வண்டி கட்டணங்களைக் முறைப்படுத்துவது தொடர்பான அனைத்து விலை விபரங்களையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயாரித்து அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, சட்டபூர்வமான கட்டணத் திருத்தம் வரும் வரை, பழைய கட்டணத்தையே தொடர்ந்தும் அறவிட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.