நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கான ஆசனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம்
நாடாளுமன்ற அவையில் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தில் இருக்கும் ஜனாதிபதியின் இலச்சினை முதல் முறையாக அகற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலாக அந்த ஆசனத்தில் அரச இலச்சினையை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை ரீதியான முடிவு
அதிமேதகு ஜனாதிபதி என்ற வார்த்தை, ஜனாதிபதிக்கான கொடி மற்றும் இலச்சினை ஆகியவற்றை பயன்படுத்துவதில்லை என ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கொள்கை ரீதியான முடிவை எடுத்தார்.
இதனடிப்படையில், நாடாளுமன்ற அவையில் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தில் இருக்கும் ஜனாதிபதியின் இலச்சினையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் இதுவரை கோட்டாபய ராஜபக்சவுக்காக வடிவமைக்கப்பட்ட இலச்சினை இருந்து வந்தது. அந்த இலச்சினையை நாடாளுமன்ற படைக்கல சேவிதர் அண்மையில் அகற்றினார்.