இலங்கையில் சிகரெட் உற்பத்தியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்
புகையிலைப் பொருட்கள் மீதான தொடர்ச்சியான வரி உயர்வுகளின் காரணமாக, 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் சிகரெட் உற்பத்தி 32% குறைந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
புகையிலை வரி கொள்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் புகையிலை வரி கொள்கையின் தாக்கத்தால், 2022ஆம் ஆண்டில் 2.8 பில்லியனாக இருந்த சிகரெட் உற்பத்தி, 2025ஆம் ஆண்டில் 1.9 பில்லியனாகக் குறைந்துள்ளது.

அரசாங்க வருவாயை அதிகரிப்பதுடன், புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நலச் செலவுகள் மற்றும் பிற எதிர்மறையான சமூக - பொருளாதார தாக்கங்களை குறைப்பதற்காகவும் இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
வரி திருத்தம்
2023ஆம் ஆண்டு முதல், சிகரெட்டுகள் மீதான கலால் வரி நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளதுடன், மதிப்புக்கூட்டு வரி மற்றும் பெருநிறுவன வருமான வரி விகிதங்களும் திருத்தப்பட்டுள்ளன.

மேலும், சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து ஒரு சிகரெட்டுக்கு ரூ. 26.59 முதல் ரூ. 109.95 வரையிலான கலால் வரி விதிப்பு முறை, ஜனவரி 11, 2025 முதல் நடைமுறையில் உள்ளது. இந்த உயர்த்தப்பட்ட புகையிலை வரிகள், பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கும் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கும் பங்களித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.