சஜித் அணியைப் பலப்படுத்த களமிறங்கும் சம்பிக்க அணி!
ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து வெளியேறியுள்ள சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர் புதியதொரு அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
குறித்த இயக்கத்துக்கு '43ஆம் பிரிவு' எனப் பெயரிடப்படவுள்ளது எனவும், இது இலக்கமல்ல தலைமுறை என்ற மகுடத்தின் கீழ் அந்த இயக்கத்தின் அரசியல் பயணம் ஆரம்பமாகும் எனவும் அறியமுடிகின்றது.
கடந்த பொதுத் தேர்தலின் பிறகு செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளை இந்த இயக்கத்துக்கு இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
1943ஆம் ஆண்டில்தான் இலங்கையில் இலவசக் கல்விக்கான சட்டமூலம் இயற்றப்பட்டது. தரம் ஒன்று முதல் பல்கலைக்கழக கல்வி வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டது.
இதுவே இலங்கையில் சமூக வளர்ச்சிக்கு வித்திட்டது. எனவேதான் '43' என்ற பெயர் சூட்டப்படவுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பலப்படுத்தும் ஒரு பங்காளியாக குறித்த இயக்கம் செயற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.