சமிந்ராணி கிரியெல்ல மீது காணி கையகப்படுத்தல் குற்றச்சாட்டு:மன்னிப்புக் கோரிய பணிப்பாளர்
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் சமிந்ராணி கிரியெல்ல சட்டவிரோதமாக காணி கையகப்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என தெரியவந்துள்ளது.
ஹந்தானை பகுதியில் 43 ஏக்கர் அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்ராணி கிரியெல்லவின் பெயரை தவறாக தொடர்புபடுத்தியமைக்காக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் லியனகே பத்மசிறி உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
நேரடியாக மன்னிப்புக் கோரிய பணிப்பாளர்
கடந்த ஆண்டு ஜூலை 17ஆம் திகதி பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (cope) முன்னிலையில் தான் வெளியிட்ட அறிக்கை தவறானது என்பதை ஒப்புக் கொண்ட பத்மசிறி நாடாளுமன்ற ஒழுக்காற்று மற்றும் வரப்பிரசாதங்கள் பற்றிய குழுவின் முன்னிலையில் தனது கவலையை தெரிவித்தார்.
அவர் நாடாளுமன்ற உறுப்பினர் கிரியெல்லவிடம் நேரடியாக மன்னிப்புக் கோரியதுடன் ஒழுக்கhற்றுக் குழு இது குறித்து பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவிற்கு அறிவித்துள்ளது.

காணி கையகப்படுத்தல் தொடர்பில் வெளியான தவறான செய்தி நாடாளுமன்ற உறுப்பினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான குழு குறிப்பிட்டுள்ளது.
தவறான அறிக்கையை திருத்தி நாடாளுமன்றத்திற்கு அறிவிக்குமாறு ஒழுக்காற்றுக் குழு பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளது.
ஹந்தானை காணி விவகாரம்
ஹந்தானை காணி விவகாரத்தில் தனது பெயர் தவறாகக் குறிப்பிடப்பட்டதன் மூலம் தனக்கு அவதூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனது நாடாளுமன்ற வரப்பிரசாதங்கள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து சமிந்ராணி கிரியெல்ல 2025 ஜூலை 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பியிருந்தார்.
அவரது முறைப்பாடு 2026 ஜனவரி 9 ஆம் திகதி ஒழுக்காற்று மற்றும் வரப்பிரசாதங்கள் பற்றிய குழுவினால் பரிசீலிக்கப்பட்ட போதே முன்னாள் பணிப்பாளர் பத்மசிறி மன்னிப்புக் கோரினார்.
இதன் மூலம் நாடாளுமன்றக் குழுக்கள் முன்னிலையில் அளிக்கப்படும் தவறான வாக்குமூலங்களினால் ஏற்படும் வரப்பிரசாத மீறல்கள் மற்றும் நற்பெயருக்கு ஏற்படும் பாதிப்புகள் எவ்வளவு பாரதூரமானவை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.